மும்பை: மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1,300+ புள்ளிகள் சரிந்தன. நிஃப்டி கிட்டத்தட்ட 400 புள்ளிகள் வீழ்ச்சி கண்டன. இதனால், முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தை இன்று (புதன்கிழமை) வர்த்தக தொடக்கத்தில் பெரிய அளவில் சரியவில்லை. ஆனால், அடுத்தடுத்த வர்த்தக நேரங்களில் கடும் சரிவை சந்தித்தது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் போர் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பும், அதனால் பணவீக்கம் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சமுமே இந்திய பங்குச் சந்தையில் இன்றைய வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணங்கள்.
மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 1,342.27 புள்ளிகள் சரிந்து 76,863.71 ஆக நிலை கொண்டது. அதே நேரத்தில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 394.75 புள்ளிகள் சரிந்து 23,866.85 ஆக நிலை கொண்டது.
இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோ மொபைல், வங்கி நிறுவனப் பங்குகள் வெகுவாக வீழ்ச்சி கண்டன. முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சரிவுக்கான முக்கிய காரணங்கள்:
உலகளாவிய காரணங்களும், உள்நாட்டு காரணங்களும் பங்குச் சந்தை சரிவுக்குக் காரணம். குறிப்பாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் முதலீட்டாளர்களை கவலையடையச் செய்துள்ளது. மோதல் குறையும் என்று டொனால்டு ட்ரம்ப் கூறினாலும், அடுத்தடுத்து தொடங்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் சந்தையை பதற்றத்தில் வைத்திருக்கின்றன.
இத்தகைய சூழல் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து தொடர்ந்து பணத்தை வெளியே எடுத்து வருகின்றனர். அதேநேரத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.48,000 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். எனினும், வெளிநாட்டு நிதி வெளியேற்றத்தால் சந்தைக்கு அழுத்தம் அதிரித்துள்ளது.
அடுத்ததாக, அமெரிக்க டாலருக்கு நிகரமான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவும் பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்திய ரூபாய் தொடர்ந்து சரிந்து அது ஒரு டாலருக்கு ரூ.91.97 ஆக இருந்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்வும் பங்குச் சந்தையில் எதிரொலித்துள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் சுமார் 84.37 டாலர் அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது. இந்தியாவின் பொருளாதாரம் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யை அதிகம் சார்ந்துள்ளது.
புவி அரசியலில் பாதகச் சூழல் தணியும் வரை இந்திய பங்குச் சந்தைகளில் தடுமாற்றம் தொடரலாம் என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.