மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடுமையாக சரிவடைந்தது. இதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.10.14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சரிவை சந்தித்தது. இந்நிலையில் 2-வது நாளான நேற்றும் கடும் வீழ்ச்சியடைந்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,456 புள்ளிகள் சரிந்து 74,559-ல் நிலை பெற்றது.
சரிவுக்கான 5 முக்கிய காரணங்கள்
தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 436 புள்ளிகள் சரிந்து 23,379-ல் நிலை பெற்றது. இதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.10.14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. சந்தையின் இந்தச் சரிவுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலில் மீண்டும் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையாகும்.
மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக வாஷிங்டன் முன்வைத்த சமீபத்திய திட்டத்தை ஈரான் நிராகரித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் 'உயிர்காக்கும் கருவி' உதவியுடன் ஊசலாடிக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி மீதான இறையாண்மை மற்றும் போர் இழப்பீடு போன்ற ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்க மறுத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தணியாததால், கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 105 டாலர் என்ற அளவை மீண்டும் தாண்டியுள்ளது. இது எரிபொருளை இறக்குமதி செய்யும் இந்தியாவைப் போன்ற நாடுகளுக்குப் பெரும் சுமையாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 95.55 ஆக வீழ்ச்சியடைந்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்ற கவலையே இதற்கு முக்கிய காரணம். அமெரிக்காவின் 10 ஆண்டுகால கடன் பத்திர லாபம் 4.423% ஆக உயர்ந்துள்ளது. கடன் பத்திரங்களில் லாபம் அதிகரிக்கும்போது, முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து பாதுகாப்பான பத்திரங்களில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள். இது பங்குச்சந்தைக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எப்ஐஐ) தொடர்ந்து இந்தியப் பங்குகளை விற்று வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை மட்டும் சுமார் ரூ.8,438 கோடி மதிப்பிலான பங்குகளை அவர்கள் விற்றுள்ளனர். இது தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக தினமாக நீடிக்கிறது. இதுபோன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.