புதுடெல்லி: ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 42 மாதங்களில் இல்லாத வகையில் 8.3% ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு ஆசிய போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை சுமார் 50 % அதிகரித்துள்ளது.
அதேநேரம் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படவில்லை. எனினும் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால், ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல, எரிவாயு விநியோக சிக்கல் காரணமாக தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் நாட்டின் மொத்த விலை பணவீக்க (டபிள்யுபிஐ) விவரத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதன்படி, டபிள்யுபிஐ 42 மாதங்களில் இல்லாத வகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.3 % ஆக உயர்ந்துள்ளது. இது மார்ச் மாதத்தில் 3.88% ஆக இருந்த நிலையில், ஏப்ரலில் இருமடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக எரிபொருள்-மின்சார பணவீக்கம் 24.71% அதிகரித்துள்ளது. இது கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு அதிக அளவாகும். மார்ச் மாதத்தில் இது 1.05% ஆக இருந்தது. நேற்று முன்தினம் வெளியான புள்ளி விவரப்படி, நாட்டின் ஏப்ரல் மாதத்துக்கான சில்லரை பண வீக்கம் (சிபிஐ) 3.48% ஆக உயர்ந்தது. இது மார்ச் மாதத்தில் 3.4% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் 790 புள்ளி உயர்வு:
இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கணிசமான உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் 790 புள்ளிகள் உயர்ந்து 75,399-லும் நிப்டி 277 புள்ளிகள் உயர்ந்து 23,690-லும் முடிவடைந்தது. இதனால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.5 லட்சம் கோடி அதிகரித்தது. இதில் அதானி என்டர்பிரைசஸ் (9%), சிப்லா (8%), பார்தி ஏர்டெல் (5%) ஆகிய பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன. எனினும், தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த பங்குகள் அதிக சரிவை சந்தித்தன.