கோவையில் நிறுவன பயன்பாட்டுக்கு உற்பத்தி செய்யப்பட்ட காப்பர் உதிரி பாகங்கள்.

 
வணிகம்

காப்பர் விலை உயர்வால் கலக்கத்தில் கோவை தொழில் துறை

இரா.கார்த்திகேயன்

கோவை: கட்டுப்பாடற்ற காப்பர் விலையால், கோவை தொழில் துறை கலக்கம் அடைந்துள்ளது.

கோவை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் முக்கிய மூலப்பொருளாக காப்பர் இருந்து வருகிறது. கோவை தொழில்துறையின் அனைத்து துறைகளிலும் பரவலாக பயன்படுத்தப்படும் காப்பரின் விலையேற்றத்தால் தொழில்துறை தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகிறது.

கோவையை சேர்ந்த காப்பர் உற்பத்தி நிறுவன உரிமையாளர் அருண்குமார் உள்ளிட்ட சிலர் கூறும்போது, "கடந்த ஆண்டு காப்பர் கிலோ ரூ.750 என்றிருந்த நிலையில், தற்போது ரூ.1500-க்கு சென்றுள்ளது. இதனால் காப்பர் பயன்பாடு உள்ள சர்க்கரை ஆலை இயந்திரங்கள், காகித ஆலைகள், கியர் தொழிற்சாலைகள், ரயில்வே துறை என பல நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்த நிறுவனங்களில் உள்ள இயந்திரங்களில் காப்பர் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஒவ்வொரு இயந்திரத்திலும் 80 சதவீதம் காப்பர் தேவைப்படும் சூழலில் இந்த விலையேற்றம் நிச்சயம் அனைத்து வித தொழில்களையும் பாதிக்கிறது.

முக்கிய மூலப்பொருளான காப்பரின் விலையேற்றத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்பாடற்ற விலையேற்றத் தால் ஆர்டர் கிடைப்பதில்லை. ஆர்டர் கொடுக்கும்போது இருக்கும் விலை, உற்பத்தி செய்யும்போது இருப்பதில்லை. இதனால் பெரிய ஆர்டர்களை காப்பர் உற்பத்தி உதிரிபாகங்கள் செய்யும் நிறுவனங்களும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உற்பத்தியில் முதலீடு அதிகரிக்கும்போது, இயல்பாகவே விலையேற்றம் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது" என்றார்.

இந்திய தொழில் வர்த்தக சபையின் துணைத்தலைவர் எஸ்.நடராஜன் கூறும்போது, “இன்றைய விலையேற்ற சூழல், தொழில்துறைக்கு உகந்ததாக இல்லை. கோவையின் தொழில் சூழல் தத்தளிப்பான சூழலில் உள்ளது. ஒரே இடத்தில் எந்த பொருளும் உற்பத்தி ஆவதில்லை. ஒரு பொருளை உற்பத்தி செய்ய பல வழி முறைகளை வணிகர்கள் கையாள வேண்டியுள்ளது.

மூலப்பொருட்களின் விலை யேற்றம் ஒருபக்கம் நெருக்கடி தருவதால், மற்றொரு பக்கம் மூலதன முதலீடு அதிகமாகிறது. இதனால் விற்பனை குறைகிறது. நிகரலாபமும் உரிய இலக்கை எட்ட முடியவில்லை. வணிகர்களுக்கு கடன் சுமை அதிகரிக்கிறது. பல்வேறு ஏற்ற, இறக்கங்களால் ஒட்டுமொத்தமாக தொழில்துறை பாதிப்பில் உள்ளது” என்றார்.

சின்னவேடம்பட்டி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தலைவர் தேவகுமார் கூறும்போது, "காப்பர் பிரதானமாக பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் 100 சதவீதம் காப்பர் என்பதற்கு பதிலாக, 70 சதவீதம் காப்பர் மற்றும் ஜிங்க், லெட் மற்றும் டின் உள்ளிட்டவை சேர்த்து மூலப்பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும்போது, அதன் தரம் குறைகிறது.

இதனால் இயல்பாகவே 5 ஆண்டுகள் உழைக்க வேண்டிய ஒரு இயந்திரம், 2 அல்லது 3 ஆண்டுகள் இயங்கும் நிலை ஏற்படும்போது, இதுவும் தொழில்துறையினரை பாதிக்கவே செய்யும். மத்திய அரசு காப்பர் விலையை கட்டுக்குள் கொண்டுவந்தால் மட்டுமே, தொழில்துறையும் எவ்வித சேதராமின்றி தொடர்ந்து இயங்கும்" என்றார்.

SCROLL FOR NEXT