புதுடெல்லி: வரும் பிப்ரவரி 1-ம் தேதி 2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி மத்திய அரசுக்கு தொழில்துறை தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்ரனர்.
இதுதொடர்பாக லாஜிஸ்டிக்ஸ் துறை திறன் கவுன்சில் (எல்எஸ்சி) தலைமைச் செயல் அதிகாரி ரவிகாந்த் யமார்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறும்போது, “கடந்தாண்டு அடிப்படைக் கட்டமைப்பு வசதித் திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1.5 லட்சம் கோடியை ஒதுக்கியது. எனவே, வரும் நிதியாண்டில் இந்தத் தொகையை ரூ.3 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் நெடுஞ்சாலை, நகர்ப்புற போக்குவரத்து, சிறு நகரங்கள் மேம்பாடு ஆகிய திட்டங்களை மேற்கொள்ள முடியும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய தளமாக தளவாடத் துறை(லாஜிஸ்டிக்ஸ்) உருவெடுத்து வரும் நிலையில், வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தற்சார்பு இந்தியா ஆகியவற்றில் புதிய அளவுகோல்களை அமைப்பதற்கு 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒரு தீர்க்கமான வாய்ப்பை நமக்கு வழங்க வேண்டும்” என்றார்.
சஞ்சய் கோடாவத் குழுமங்களின் நிர்வாக இயக்குநர்ஷிரேனிக் கோடாவத் கூறும்போது, “நமது நாட்டில் நிலையான அடிப்படை உள்கட்டமைப்புத் திட்டங்களை கொண்டுவரும்போது அது முதலீடுகளை ஈர்ப்பதற்கும், போட்டித்திறனை அதிகரிப்பதற்கும், வளர்ச்சிப் பலன்கள் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதற்கும் முக்கியமானதாக அமையும்.
குறிப்பாக குளிர்பதன கிடங்குவசதிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான முறையான வழித்தடங்களில் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். எனவே, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்” என்றார்.