வணிகம்

காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மின்சார அடுப்புகளுக்கு எகிறும் டிமாண்ட்!

சல்மான்

சென்னை: ஈரான் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதற்கு மாற்றாக இண்டக்‌ஷன் அடுப்புகளை நாடி வருகின்றனர். இதன் விளைவாக, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட்  மற்றும் ஸெப்டோ போன்ற செயலிகளில் இண்டக்‌ஷன் அடுப்புகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன.

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கு 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளதால், நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் மின்சார அடுப்புகளை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

          

கடந்த சில நாட்களாக இண்டக்‌ஷன் அடுப்புகளுக்கான தேவை வழக்கத்தை விட 300 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த 24 மணிநேரத்தில் அமேசான் தளத்தில் இண்டக்‌ஷன் அடுப்புகளின் விற்பனை வழக்கத்தை விட 20 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ப்ளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 4 முதல் 5 நாட்களில் இண்டக்‌ஷன் அடுப்புகளின் விற்பனை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. டெல்லி, கொல்கத்தா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதன் தேவை மிக உச்சத்தில் உள்ளது. சர்வதேசச் சூழலால் இண்டக்‌ஷன்அடுப்பு என்பது ஆடம்பரப் பொருள் என்பதிலிருந்து மாறி, தற்போது உயிர்வாழும் தேவையாக மாறியுள்ளதாக ப்ளிப்கார்ட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆன்லைன் டெலிவரி தளங்களில் ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே அவுட் ஆஃப் ஸ்டாக் என்ற அறிவிப்பு வருவதாக வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

மின்சார அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின்சார விநியோகக் கட்டமைப்பில் அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எரிசக்தி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வளைகுடா பகுதியில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய இண்டக்‌ஷன் அடுப்புகளின் கையிருப்பை உடனடியாகக் கொண்டுவருவதில் மின்சாதன உற்பத்தி நிறுவனங்களும் சவால்களைச் சந்தித்து வருகின்றன.

SCROLL FOR NEXT