புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து பெங்களூவுருக்கு கூடுதல் விமான சேவையை மே 1 முதல் இண்டிகோ இயக்குகிறது. அதேபோல் ராஜமுந்திரிக்கு இணைப்பு விமானமும் செயல்படவுள்ளது.
புதுச்சேரி விமான நிலையத்துக்கு தற்போது பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு நண்பகல் 12.25-க்கு வந்து இங்கிருந்து பயணிகளை ஏற்றி ஹைதராபாத் மதியம் 2.30 சென்று அங்கிருந்து புதுச்சேரிக்கு மாலை 4.30 வரும் விமானம் மீண்டும் பெங்களூருக்கு மாலை 6.35 சென்றடையும் வகையில் இண்டிகோ சிறிய ரக விமானம் இயங்கி வந்தது. இந்நிலையில், கூடுதல் விமான சேவையை இண்டிகோ வரும் மே 1 முதல் இயக்குகிறது.
இது தொடர்பாக புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரிக்கு இண்டிகோ புதிய விமான சேவைகளை வரும் மே 1 முதல் இயக்குகிறது. பெங்களூரில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் விமானம் காலை 11.15க்கு புதுச்சேரி வந்தடையும். அந்த விமானம் புதுச்சேரியில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு காலை 12.15 மணிக்கு சென்றடையும்.
ராஜமுந்திரியில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்படும் விமானம் ஹைதராபாத்துக்கு காலை 11.15 மணிக்கு சென்றடைந்து அங்கிருந்து 11.45 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்கு மதியம் 1. 40 மணிக்கு வந்தடையும். அந்த விமானம் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு மதியம் 3.15 மணிக்கு சென்றடையும். பெங்களூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்கு மாலை 5.10 மணிக்கு வந்தடையும்.
புதுச்சேரியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு ஹைதாராபாத்தை இரவு 7.20 சென்றடையும் அங்கிருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு ராஜமுந்திரியை இரவு 9.05 சென்றடையும்.
புதிய விமான சேவையின் அறிமுகமானது பிராந்திய இணைப்பை மேம்படுத்தும். புதுச்சேரியில் இருந்து இதர நகரங்களுக்கு விமான பயணத்துக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும். விமான இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பிராந்தியத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு புதுச்சேரி விமான நிலையம் துணைநிற்கும் என தெரிவித்துள்ளார்.