புதுடெல்லி: விமான சேவைகள் ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பில் ‘வவுச்சர்கள்’ வழங்கப்படும். மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை இழப்பீடும் வழங்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானிகள், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த ஒரு வாரத்தில் இண்டிகோ நிறுவனத்தின் 4,900 உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உட்பட பல்வேறு விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான விமான பயணிகள் பரிதவித்தனர்.
இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை விசாரணை நடத்தி வருகிறது. முதல் கட்டமாக இண்டிகோ நிறுவன விமான சேவைகளில் 10 சதவீதத்தை குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்த சூழலில் விமான பயணிகளிடம் நன்மதிப்பை பெற இண்டிகோ நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ரத்து செய்யப்பட்ட 12.5 லட்சம் பயணச் சீட்டுகளுக்காக ரூ.1,158 கோடி பயணிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்களது வாடிக்கையாளர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். ரத்து செய்யப்பட்ட பயணச் சீட்டுகளுக்கான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்குகளில் திருப்பி செலுத்தப்பட்டு இருக்கிறது.
விமான சேவை ரத்தால் கடந்த 3, 4, 5-ம் தேதிகளில் பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ.10,000 மதிப்பில் ‘வவுச்சர்கள்’ வழங்கப்படும். இதை பயன்படுத்தி இண்டிகோ விமானங்களில் பயணம் மேற்கொள்ளலாம். அடுத்த 12 மாதங்கள் வரை இந்த ‘வவுச்சர்கள்’ செல்லுபடியாகும்.
ரூ.10,000 இழப்பீடு: மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கப்படும். விமான சேவை ரத்து, காலதாமத நேரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த இழப்பீடு அளிக்கப்படும்.
பாதுகாப்பான, நம்பகமான விமான சேவையை வழங்க இண்டிகோ நிறுவனம் உறுதி பூண்டிருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.