நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரம், இந்தியாவின் வலுவான வளர்ச்சி காரணமாக 2024-ல் 5.2 சதவீதமாகவும், 2025-ல் 5.4 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
குறிப்பாக, 2025-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரித்தது. ஊரகப் பகுதிகளில் நுகர்வு அதிகரிப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பு மற்றும் அமெரிக்கா விதித்த கூடுதல் இறக்குமதி வரிக்கு முன்னதாகவே செய்யப்பட்ட அதிகப்படியான ஏற்றுமதி ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.
இருப்பினும், 2025 ஆகஸ்ட் முதல் அமெரிக்கா விதித்த 50 சதவீத கூடுதல் வரி காரணமாக, அந்நாட்டிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 25 சதவீதம் சரிந்தது. இதனால் 2025-இன் இரண்டாம் பாதியில் பொருளாதார நடவடிக்கைகள் சற்று குறைந்தன. இருப்பினும், சேவைத் துறை தொடர்ந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்து வருகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் (2026) 6.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் 6.6 சதவீதமாகவும் இருக்கும். அதேபோல், நாட்டின் பணவீக்கம் நடப்பாண்டில் 4.4 சதவீதமாகவும், 2027-ல் 4.3 சதவீதமாகவும் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.