புதுடெல்லி: ‘‘ஈரான் போர் காரணமாக, மேற்கு ஆசியாவில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 80 சதவீதம் வரை பாதிக்கலாம்’’ என நிக்கேய் ஆசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
காபி உற்பத்தியில் பிரேசில் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக, 7-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய காபி துபாய், குவைத் மற்றும் ரியாத் ஆகிய நகரங்களில் உள்ள உணவு விடுதிகளில் பல ஆண்டுகளாக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஆனால் தற்போது ஈரான் போர் காரணமாக கப்பல் போக்குவரத்து முடங்கி, சரக்கு போக்குவரத்து செலவுகள் உயர்ந்துள்ளன.
இதனால் மேற்கு ஆசிய சந்தையில், இந்தியாவின் காபி ஏற்றுமதி 80 சதவீதம் வரையில் பாதிப்பை சந்திக்கலாம் என காபி தொழில்துறை அஞ்சுவதாக நிக்கேய் ஆசியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து பிரச்சினை நீண்டகால நெருக்கடியாக மாறும் என்று இந்திய காபி ஏற்றுமதியாளர்கள் கருதுகின்றனர்.
இந்தியா தனது காபி உற்பத்தியில் 70 சதவீதத்தை ஏற்றுமதி செய்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மேற்கு ஆசியாவில் இந்தியா தனது காபி சந்தையை தொடர்ந்து விரிவுபடுத்தியது. ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு கடந்த 2024-ல் இந்தியாவின் காபி ஏற்றுமதி, மொத்த ஏற்றுமதியில் 16 சதவீதத்துக்கும் மேல் இருந்தன.
80 சதவீத இழப்பு
இது குறித்து இந்திய காபி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரமேஷ் ராஜா கூறுகையில், ‘‘மேற்கு ஆசிய சந்தையில் வரும் மாதங்களில், இந்திய காபி ஏற்றுமதியாளர்கள் 80% வரை இழப்பைச் சந்திக்க நேரிடும். பெரும்பாலான இந்திய காபிகள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே அனுப்பப்படுவதால், ஏற்றுமதி தாமதமாகிறது அல்லது வேறு பாதைகளுக்கு மாற்றப்படுகிறது. இதனால் லாபம் குறைந்து வருகிறது’’ என்றார்.