வணிகம்

‘‘இந்திய பொருளாதாரம் உயர் வளர்ச்சியை பதிவு செய்யும்’’ - ரிசர்வ் வங்கி ஆளுநர்

மோகன் கணபதி

புதுடெல்லி: வெளிப்புறச் சூழல் நிலையற்றதாக இருந்தபோதிலும், இந்திய பொருளாதாரம் உயர் வளர்ச்சியை பதிவு செய்யும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

நிதி நிலைத்தன்மை குறித்த ரிசர்வ் வங்கி ஆவணத்தின் முன்னுரையில் சஞ்சய் மல்ஹோத்ரா கூறிருப்பதாவது: நிதி நிலைத்தன்மையைப் பேணுவதும், நிதி அமைப்பை வலுப்படுத்துவதும் எங்கள் முதன்மை இலக்காக உள்ளது. நிதி நிலைத்தன்மை என்பது ஒரு முடிவல்ல என்பதை நிதித்துறை ஒழுங்குமுறை அமைப்புகள் அங்கீகரிக்கின்றன. வளர்ச்சியை ஊக்குவித்தல், நுகர்வோரை பாதுகாத்தால், நிதி அமைப்பின் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவை சம அளவில் முக்கியமாகின்றன.

கொள்கை வகுப்பாளர்கள் செய்யக்கூடிய மிக முக்கிய பங்களிப்பு என்பது, வலுவான, அதிர்ச்சிகளை தாங்கக் கூடிய, நிதிச் சேவைகளை வழங்குவதில் பொறுப்பான புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நிதி அமைப்பை வளர்ப்பதே ஆகும்.

வலுவான வளர்ச்சி, மிதமான பணவீக்கம், நிதி நிறுவனங்களின் ஆரோக்கியமான இருப்பு நிலை குறிப்புகள், விவேகமான கொள்கை சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் காரணமாக இந்திய பொருளாதாரமும் நிதி அமைப்பும் வலுவாக உள்ளன.

நிலையற்ற, சாதகமற்ற வெளிப்புறச் சூழல் இருந்தபோதிலும், வலுவான உள்நாட்டு நுகர்வு மற்றும் முதலீட்டின் உந்துதலால் இந்திய பொருளாதாரம் உயர் வளர்ச்சியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், வெளிப்புறத் தாக்கங்களால் ஏற்படும் குறுகிய கால சவால்களை நாங்கள் அங்கீகரிக்கிறோம். மேலும், பொருளாதாரத்தையும் நிதி அமைப்பையும் சாத்தியமான அதிர்ச்சிகளில் இருந்து பாதுகாக்க வலுவான பாதுகாப்பு அரண்களை நாங்கள் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT