வணிகம்

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியக் குழு அடுத்த வாரம் அமெரிக்கா பயணம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்க அதி​காரி​களு​டன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​காக முக்கிய அதி​காரி​கள் அடங்​கிய உயர் மட்​டக் குழு அடுத்த வாரம் வாஷிங்​டன் செல்​ல​வுள்​ள​தாக அதி​காரப்​பூர்வ வட்டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

இதுகுறித்து அந்த வட்​டாரங்​கள் மேலும் கூறி​யுள்​ள​தாவது: இந்தியா மற்​றும் அமெரிக்கா இடையே இடைக்​கால வர்த்தக ஒப்​பந்​தத்​திற்​கான கட்​டமைப்​பு​கள் ஏற்​கெனவே இறுதி செய்யப்பட்டுள்ள நிலை​யில், இரு நாட்டு வர்த்தக அதி​காரி​களுக்கு இடையிலான இந்த இருதரப்பு சந்​திப்பு மிகுந்த முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாகக் கருதப்​படு​கிறது. இந்த வர்த்தக ஒப்​பந்​தம் முதலில் கடந்த மார்ச் மாதமே கையெழுத்​தாக வேண்​டி​யிருந்​தது.

          

எனினும், அமெரிக்க உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்​பைத் தொடர்ந்து அந்​நாட்​டின் இறக்​குமதி வரி விதிப்பு முறை​களில் ஏற்​பட்ட மாற்​றங்​களால் சூழல் மாறி​யுள்​ளது. அமெரிக்​கா​வின் புதிய உலகளா​விய வரி விதிப்​புக் கட்​டமைப்பு நடை​முறைக்கு வந்​தவுடன், இந்த ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று முன்​ன​தாகத் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

கடந்த பிப்​ர​வரி மாதத்​தில், இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தத்​தின் முதற்​கட்ட கட்​டமைப்பை இறுதி செய்​த​தாக இரு நாடு​களும் அறி​வித்​தன. அந்த உடன்​படிக்​கை​யின்​படி, இந்​தியா மீதான இறக்​குமதி வரி​களை 18 சதவீத​மாகக் குறைக்க அமெரிக்கா ஒப்​புக்​கொண்​டிருந்​தது. ஆனால், அதிபர் டொனால்டு ட்ரம்ப்​பின் வரி விதிப்பு முறை​களுக்கு எதி​ராக அமெரிக்க உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​ததையடுத்து, வரி விதிப்​புக் கொள்கை மாறி​யுள்​ளது.

அதனைத் தொடர்ந்​து, பிப்​ர​வரி 24-ம் தேதி முதல் 150 நாட்களுக்கு அனைத்து நாடு​களுக்​கும் 10 சதவீத வரியை அதிபர் ட்ரம்ப் விதித்​துள்​ளார். இந்த மாற்​றங்​கள் காரணமாக, கடந்த மாதம் நடை​பெற​விருந்த இரு நாட்​டுத் தலை​மைப் பேச்​சு​வார்த்​தைக்​கான சந்​திப்பு ஒத்​திவைக்கப்​பட்​டது. இந்​தியா முதலில் ஒப்​பந்​தத்தை இறுதி செய்​த​போது, மற்ற போட்டி நாடு​களை விட சாதக​மான நிலை​யில் இருந்​தது. ஆனால், தற்​போது அமெரிக்​கா​வின் அனைத்து வர்த்​தகக் கூட்​டாளி​களும் ஒரே மாதிரி​யான 10 சதவீத வரி விதிப்​பையே எதிர்​கொண்டு வரு​கின்​றனர்.

இந்த இக்​கட்​டான சூழலில் நடை​பெறவுள்ள உயர்​மட்ட அதி​காரி​கள் அளவி​லான இந்​தப் பேச்​சு​வார்த்தை இந்​திய ஏற்​றும​தி​யாளர்​களுக்​குச் சாதக​மான முடிவு​களை எட்ட உதவும் என்​பது அனை​வரின் எதிர்​பார்ப்​பாக உள்​ளது. இவ்வாறு அந்​த வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம், வர்த்தகச் சட்ட பிரிவு 301-ன் கீழ் இரண்டு முக்கிய விசாரணைகளை மேற்கொண்டு வருகிற காரணத்திற்காகவும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்திய குழு சந்திப்பு முக்கியத்துவம் பெறுவதாக அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT