புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கடந்த மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியதிலிருந்தே, ரஷ்யாவிடம் மலிவு விலையில் கிடைத்த கச்சா எண்ணெயை இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்தது. இதையடுத்து இந்தியாவுக்கு வரி உயர்த்தப்படும் என அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது.
இந்நிலையில் ஈரான் போர் தொடங்கி ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியதால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மீண்டும் கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள அமெரிக்கா விலக்கு அளித்தது.
இது குறித்து ஃபின்லாந்தைச் சேர்ந்த எரிசக்தி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா கடந்த ஏப்ரல் மாதம் 5.2 பில்லியன் டாலர் அளவுக்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. இந்தியா மொத்தம் 5.8 பில்லியன் டாலர் அளவுக்கு ரஷ்யாவிடமிருந்து ஹைட்ரோ கார்பன்களை இறக்குமதி செய்தது. இவற்றில் 83 சதவீதம் கச்சா எண்ணெய்.
ரஷ்யாவிடமிருந்து சீனா 8.1 பில்லியன் டாலர் அளவுக்கு எரிபொருள் இறக்குமதி செய்து முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்ததாக இந்தியா தொடர்ந்து 2-ம் இடத்தில் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், வாடினார் மற்றும் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இறக்குமதி அளவு முறையே 36 சதவீதம் மற்றும் 14 சதவீதம் அதிகரித்ததே ஆகும்.
இதேபோல், அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் இறக்குமதி அளவு முந்தைய மாதத்தை விட முறையே 13 சதவீதம் மற்றும் 42 சதவீதம் அதிகரித்தது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கிய நிலையிலும் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை.