மும்பை: இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டு விட்டது என்றும், முன்னுரிமை அடிப்படையில் சந்தை அணுகலைப் பெறுவதற்கான கட்டமைப்பை இரு தரப்பினரும் உருவாக்கி வருவதாகவும் வர்த்தகத் துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜேஷ் அகர்வால் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், “இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டு விட்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளும் தங்கள் சந்தைகளில் முன்னுரிமை அணுகலைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
மிகவும் விரும்பப்படும் நாடு என்ற பட்டியலின் கீழ் சுங்க வரிகளை அமெரிக்காவுக்கு இந்தியா விதிக்கிறது. ஆனால், அமெரிக்கா நிர்வாக ரீதியிலான சுங்க வரி முறையைக் கொண்டுள்ளது. இந்தியாவுக்குச் சாதமான முன்னுரிமை சந்தை அணுகலை உருவாக்கும் வகையில் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டியுள்ளது.
இரு தரப்பு வணி நிறுவனங்களும் ஏற்கெனவே வலுவாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இரு அரசாங்கங்களுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள ஒட்டுமொத்த புரிதலில் அவை திருப்தி அடைந்துள்ளன” எனத் தெரிவித்தார்.
பிற நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராஜேஷ் அகர்வால, “இந்தியா - சிலி இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளது. சில அம்சங்கள் இன்னும் விவாதத்தில் உள்ளன. அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரும் அக்டோபர் மாதத்தில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர இந்தியா விரும்புகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், 60 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட நாடுகளை உள்ளடக்கிய ஒன்பது வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது” என தெரிவித்தார்.