வணிகம்

இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம்: இந்திய - அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்: ஏப்ரல் 20 முதல் 23 வரை, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை உயரதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு இந்திய தரப்பில் தர்பன் ஜெயின் தலைமை தாங்கினார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, சந்தை அணுகல், வரி இல்லாத வர்த்தக நடவடிக்கைகள், வர்த்தகம் தொடர்பான தொழில்நுட்ப தடைகள், சுங்கம் மற்றும் வர்த்தக செயல்முறையை எளிதாக்குவது, முதலீட்டு மேம்பாடு, பொருளாதார பாதுகாப்பை ஒருங்கிணைப்பது, டிஜிட்டல் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தையின் இறுதியில், இடைக்கால ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து இறுதி செய்யப்பட்டது. இந்த இடைக்கால ஒப்பந்தம், பரந்த மற்றும் விரிவான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தைகளின் வேகத்தை தக்கவைத்துக்கொள்ள இரு தரப்பும் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், இந்தியாவின் போட்டித்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்கச் சந்தையில் முன்னுரிமை அடிப்படையிலான சந்தை அணுகலை பெறுவதற்கு இந்தியா தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT