ராமேசுவரம்: இலங்கையில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்கும் திட்டத்துக்காக இந்தியா ரூ.50 கோடி நிதியுதவி வழங்க உள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள காங்கேசன்துறை துறைமுகம் இலங்கையின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய இடமாகவும், இந்தியாவுக்கு மிக அருகில் (ராமேசுவரம் மற்றும் வேதாரண்யத்தில் இருந்து 35 கடல் மைல்) உள்ள துறைமுகம் ஆகும்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது விடுதலைப் புலிகளின் கப்பல் படையை வீழ்த்துவதற்காக அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதல்களில் காங்கேசன்துறை துறைமுகம் பலத்த சேதமடைந்தது.
இலங்கையின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பெறும்பான்மையினராக வாழும் வடமாகாணத்தின் வளர்ச்சிப் பணிக்கு உதவ வேண்டும் என்று இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டின் அடிப்படையில் காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா ஏற்கெனவே ரூ.287 கோடி நிதியுதவி வழங்கி மேம்படுத்தப்பட்டது.
தொடர்ந்து 14.10.2023 அன்று தமிழகத்தின் நாகபட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கே சன்துறை துறைமுகத்துக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளுக்காக தற்போது ரூ.50 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
வர்த்தக ரீதியிலான துறைமுகமாகவும், சரக்குக் கப்பல்களை கையாளுவதற்கும், துறைமுகத்தில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படும். மேலும் இதன் மூலம் தமிழர்கள் அதிகம் வாழும் மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.