புது டெல்லி: ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கான எண்ணெய் இறக்குமதி 44 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஜனவரி மாதம் வெகுவாக குறைந்தது. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு மே 2022-க்குப் பிறகு முதல் முறையாக 20%-க்கும் கீழே குறைந்துள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்தியா தனது ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஜனவரி 2026-இல் ரஷ்யாவிலிருந்து 1.98 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 44 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவானதாகும்.
இதன் மூலம், இந்திய எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு ஜனவரி 2026-இல் 19.3% ஆகக் குறைந்தது. இது, டிசம்பர் 2022-க்குப் பிறகு மிகக் குறைவானது ஆகும். இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு 27.5% ஆகவும், மே 2025-இல் 33% ஆகவும் இருந்தது.
அமெரிக்க வர்த்த ஒப்பந்தத்துக்குப் பின்னர், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்த இந்தியா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் எண்ணெய் வாங்குவதை அதிகரித்தது.
ஜனவரி 2026-இல் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 16.6% ஈராக்கிலிருந்து வந்தது. சவுதி அரேபியாவின் இந்திய எண்ணெய் இறக்குமதி பங்கு ஜனவரி 2026-இல் 17.5% ஆக உயர்ந்தது. இது, ஏப்ரல் 2023-க்குப் பிறகு மிக உயர்வானது ஆகும். இதேபோல், குவைத்தின் இறக்குமதி பங்கு 6.1% ஆக உயர்ந்தது. இது, பிப்ரவரி 2023-க்குப் பிறகு மிக உயர்வானது ஆகும்.
இருப்பினும், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், இந்த அனைத்து வளைகுடா நாடுகளிலிருந்தும் இந்தியாவுக்கான எண்ணெய் விநியோகம் ஆபத்தில் உள்ளது.
பிப்ரவரி 28 அன்று தொடங்கிய ஈரானுடனான மோதலுக்குப் பிறகு வளைகுடா மற்றும் அமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதி தற்போது ஆபத்தில் உள்ளது.
மேற்கு ஆசியாவில் தற்போதைய மோதல் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 8% அதிகரித்து, மார்ச் 2-ஆம் தேதி ஒரு பீப்பாய்க்கு 80 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.