புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 7.8 சதவீதமாக உள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஈரான் இடையிலான போரால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. எனினும் இந்திய பொருளாதாரம் மிகவும் வலுவாக உள்ளது. உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடு என்ற பெருமையை இந்தியா தக்க வைத்து வருகிறது. இந்த சூழலில் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: 2026-27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. இது அபார வளர்ச்சி ஆகும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
உலக விநியோக சங்கிலியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த சவால்களை தாண்டி இந்திய மக்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஒரு தரப்பினர் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் தற்போது மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தியா தொடர்ச்சியாக பூத்து குலுங்குகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய பொரு ளாதார நிபுணர்கள் கூறியதாவது: வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
இந்த இலக்கை எட்ட 9.25 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். ஆனால் பல்வேறு நாடுகளில் நடைபெறும் போர்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்காவின் வர்த்தக போர் உள்ளிட்ட காரணங்களாக ஒட்டுமொத்த உலக நாடுகளும் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்த சூழலிலும் இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
பொருளாதார வளர்ச்சி குறைந்தால் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும். தொழிலாளர்களின் ஊதியம் குறையும். நாடு முழுவதும் வர்த்தகம் பாதிக்கப்படும். தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உயர்ந்திருப்பதால் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இவ்வாறு இந்திய பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.