இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையே அண்மையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் காரணமாக சீனா, பாகிஸ்தான், வங்கதேச நாடுகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
குறிப்பாக வங்கதேசத்தின் ஜவுளி தொழில் பாதிக்கப்படும். பாகிஸ்தானில் சுமார் ஒரு கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்படும். ஐரோப்பிய நாடுகளுக்கான சீன பொருட்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சூழலில் அமெரிக்கா, இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருப்பது சீனா, பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சீன பொருட்களுக்கு அமெரிக்கா 48 சதவீத வரியை விதித்து வருகிறது. பாகிஸ்தான் பொருட்களுக்கு 19%, வங்கதேச பொருட்களுக்கு 20 சதவீத வரியை அமெரிக்கா விதித்திருக்கிறது. இதைவிட குறைவாக இந்திய பொருட்களுக்கு 18 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஜவுளி, மருந்து பொருட்கள், தோல் பொருட்கள், மின்னணு பொருட்கள், இயந்திரவியல் பொருட்கள், பாசுமதி அரிசி, வைரங்கள், தங்க நகைகளின் ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் உடனான ஒப்பந்தம், அமெரிக்க அரசின் வரி குறைப்பால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்தை தாண்டி செல்லும் என்று பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.