புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்காகவும் முக்கிய தாதுக்களை பகிர்ந்து கொள்ளவும் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இணைய இந்தியா ஒப்பந்தம் செய்தது.
பாக்ஸ் சிலிக்கா என்பது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மற்றும் செமிகண்டக்டர்களுக்கான உலகளாவிய விநியோகத்தை பாதுகாப்பதற்காக அமெரிக்காவால் தொடங்கப்பட்ட கூட்டணியாகும். இதில் ஆஸ்திரேலியா, கிரீஸ், இஸ்ரேல், ஜப்பான், கத்தார், தென் கொரியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்து ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன. டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் அமெரிக்கா தலைமையிலான பாக்ஸ் சிலிக்கா அமைப்புடன் இந்தியா நேற்று ஒப்பந்தம் செய்தது.
இதன் மூலம் அரிய வகை தாதுக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு விநியோகத்துக்கு சீனாவை சார்ந்திருப்பது குறையும். அடுத்த தலைமுறை தொழில்துறைகளுக்குத் தேவையான முக்கிய ஆதாரங்களைப் பாதுகாப்பான முறையில் பெறுவது, தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ள நிலையில், அமெரிக்கா தலைமையிலான பாக்ஸ் சிலிக்கா அமைப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
இந்தியா இப்போது பாக்ஸ் சிலிக்காவின் ஓர் அங்கமாக மாறியுள்ளது. இது இந்தியாவின் மின்னணு மற்றும் செமிகண்டக்டர் தொழில்துறைக்கு மிகவும் பயனளிக்கும். இந்தியாவில் ஏற்கனவே பத்து செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மிக விரைவில், முதல் செமிகண்டக்டர் ஆலை வணிக ரீதியான உற்பத்தியைத் தொடங்கவுள்ளது. இந்தியாவில் ஒரு முழுமையான தொழில் சூழல் உருவாகி வருகிறது. இதற்கு பாக்ஸ் சிலிக்கா முக்கியமானதாக இருக்கும். இதன் மூலம் இந்திய இளைஞர்கள் பயனடைவர். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கூறுகையில், “21-ஆம் நூற்றாண்டின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒழுங்கை வடிவமைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்துள்ளன. இந்தியாவின் பொறியியல் திறன், தாதுக்களை மேம்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் அமெரிக்க-இந்திய தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அதன் பங்கு ஆகியவை மிக அவசியமானது. உலகளவில் நம்பகமான செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதே இந்த கூட்டாண்மையின் நோக்கம்” என்றார்.