புதுடெல்லி: சிறு முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில் பங்கு பரிவர்த்தனை வரி (எஸ்டிடி) உயர்த்தப்பட்டது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மத்திய பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டபோது பங்குச் சந்தையில் எஃப் அண்ட் ஓ வர்த்தகத்திற்கான பங்கு பரிவர்த்தனை வரி (எஸ்டிடி) உயர்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து அன்றைய தினம் சென் செக்ஸ் 2,370 புள்ளிகளை வரை சரிந்தன. நிப்டி 748 புள்ளிகள் வரை சரிந்தன.
பட்ஜெட் தாக்கலுக்கு பின் நேற்று முன்தினம் நடைபெற்ற கருத்தரங்கில் இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "எஃப் அண்ட் ஓ வர்த்தகத்துக்கு மத்திய அரசு எதிரானது அல்ல.
யூகத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த வர்த்தகத்தில் சிறு முதலீட்டாளர்கள் அதிக இழப்புகளை சந்திக்கின்றனர். அவர்கள் எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தில் இருந்து விலகியிருப்பதற்காகவே எஸ்டிடி வரி கணிசமாக உயர்த்தப்பட்டது. சிறு முதலீட்டாளர்கள் இழப்பை சந்திக்கும் போது, நாங்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.