மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள கடையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருக்கும் விறகுகள்.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை: அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரானுடன் நடத்திவரும் போரால் காஸ் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விறகு அடுப்பு பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால், ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற ஒரு டன் விறகு ரூ.15 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போரால் ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய், எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, எல்பிஜி சிலிண்டர்கள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்கள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சில உணவகங்கள் மூடப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனால், மதுரை மாவட்டத்தில் உணவகங்களில் விறகு அடுப்புகளுக்கு மாறத் தொடங்கியுள்ளனர். இதனால் விறகு அடுப்பு, மின்சார அடுப்புகள் விற்பனையும் அதிகரித்துள்ளது. விறகு அடுப்பு பயன்பாடு காரணமாக விறகு விற்பனை அதிகரித்துள்ளது.
இதனால் விறகின் விலையும் உயர்ந்துள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு செய்தி பரவுவதால், வீடுகளுக்கு விநியோகிக்கும் சிலிண்டர்கள் பெறுவதற்காக கேஸ் ஏஜென்சிகள் முன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள விறகு விற்பனையாளர் கூறுகையி்ல், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாநகர் பகுதிகளில் உள்ள உணவகங்களில் இருந்து விறகு வாங்கிச் செல்வதால், இதன் விற்பனை அதிகரித்துள்ளது.
தேனி, திண்டுக்கல், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சீமைக்கருவேலம், சவுக்கு, பனை, புளியமரம் உள்ளிட்ட விறகுகள் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன.
முன்பு ஒரு டன் ரூ.10 ஆயிரத்துக்கு விற்றது. இப்போது தேவை அதிகரிப்பால் ஒரு டன் விறகு ரூ. 15 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என அவர் கூறினார்.