இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2025-26 நிதி ஆண்டில் 6.6% ஆக இருக்கும் என முன்பு கணித்திருந்த சர்வதேச நாணய நிதியம், அதை தற்போது 7.3% ஆக உயர்த்தி கணிப்பை வெளியிட்டுள்ளது.
உலகப் பொருளாதார கண்ணோட்டம் ஜனவரி 2026 அறிக்கையை, சர்வதேச நாணய நிதியம் இன்று வெளியிட்டுள்ளது. அதில், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக புள்ளி விவரங்களின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியம் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலகின் பொருளாதார வளர்ச்சி 2026-ம் காலண்டர் ஆண்டில் 3.3% ஆக இருக்கும் என்றும், 2027-ல் இது 3.2% ஆக குறையும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 2025-ல் உலக பொருளாதார வளர்ச்சி 3.3% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டதோடு ஒப்பிடுகையில், வளர்ச்சியில் பெரிய மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது.
நாடுகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வகிதங்களும் மாறுபடுகின்றன. 2025-ம் காலண்டர் ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2.1% ஆகவும், 2026-ல் இது 2.4% ஆகவும், 2027-ல் 2% ஆகவும் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
2025-ம் காலண்டர் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருக்கும் என கணித்துள்ள சர்வதேச நாணய நிதியம், 2026-ல் இது 4.5% ஆகவும், 2027-ல் 4% ஆகவும் குறையும் என கணித்துள்ளது.
2025-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.30% ஆக இருக்கும் என கணித்துள்ள சர்வதேச நாணய நிதியம், 2026-ல் இது 6.40% ஆகவும், 2027-ல் 6.40% ஆகவும் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. மூன்றாவது காலாண்டில் எதிர்பார்த்ததைவிட இந்தியாவின் செயல்பாடு சிறப்பாகவும், வலுவாகவும் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.