அனில் அகர்வால், அருகில் இறந்த அவரது மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் உடன்
மும்பை: மகன் அக்னிவேஷின் திடீர் மரணத்தை தொடர்ந்து, தனது வருமானத்தில் 75 சதவீதத்துக்கு மேல் சமூகத்துக்கு செலவிடப் போவதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வேதாந்தா குழுமம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிரபல ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வருகிறது. இக்குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால். இவரது மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் (49). அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீர் மாரடைப்பு காரணமாக புதன்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து ‘எக்ஸ்' தளத்தில் அனில் அகர்வால் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இன்று எனது வாழ்க்கையின் மிக இருண்ட நாள். எனது அன்புக்குரிய மகன் அக்னிவேஷ் எங்களை விட்டு மிக விரைவாகப் பிரிந்து சென்றுவிட்டார். ஆரோக்கியமாகவும், கனவுகள் நிறைந்தவராகவும் அவர் இருந்தார். தனது குழந்தைக்கு விடை கொடுக்கும் பெற்றோரின் வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு மகன் தனது தந்தைக்கு முன் பிரிந்து செல்லக்கூடாது.
விளையாட்டு வீரராக, இசை கலைஞராக, நண்பராக இருந்தவர் அக்னிவேஷ் எந்தக் குழந்தையும் பசியுடன் உறங்கக் கூடாது, எந்தக் குழந்தைக்கும் கல்வி மறுக்கப்படக் கூடாது, ஒவ்வொரு பெண்ணும் தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும், ஒவ்வொரு இளம் இந்தியருக்கும் அர்த்தமுள்ள வேலை கிடைக்க வேண்டும் என்ற கனவை நாங்கள் இருவரும் பகிர்ந்துகொண்டோம்.
நாங்கள் சம்பாதிப்பதில் 75 சதவீதத்திற்கு மேல் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பேன் என்று நான் அக்னியிடம் உறுதி அளித்திருந்தேன். இன்று, அந்த வாக்குறுதியை நான் புதுப்பித்து, இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழத் தீர்மானிக்கிறேன். இவ்வாறு அனில் அகர்வால் கூறியுள்ளார்.
வேதாந்தா குழுமத்தில் பணியாற்றிய அக்னிவேஷ் ஃபுஜைரா கோல்டு நிறுவனத்தை நிறுவினார். மேலும் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் தலைவரானார். வேதாந்தா குழுமத்தின் தல்வண்டி சாபோ பவர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தார். அக்னிவேஷ் அகர்வாலின் அகால மரணத்துக்கு பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.