புதுடெல்லி: காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 100% ஆக உயர்த்தும் காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அதனை வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவை நான் வரவேற்கிறேன்.
ஐ.கே. குஜ்ரால் ஆட்சியின்போது, காப்பீட்டுத் துறையில் 20% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது அதனை பாஜக எதிர்த்த அந்த நாளை நான் நினைவு கூர்கிறேன். 1997-98ல் இருந்து நாம் தற்போது கடந்து வந்திருப்பது மிக நீண்ட தூரம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
வரும் 2047க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை மையப்படுத்தி காப்பீட்டுத் துறையில் மத்திய அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. தற்போது காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீடு 74% ஆக உள்ள நிலையில், அதனை 100% ஆக உயர்த்த பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கலின்போது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 100% ஆக உயர்த்தப்படும். முழு ப்ரீமியம் தொகையையும் இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு இந்த உயர்வு பொருந்தும். அந்நிய நேரடி முதலீடு தொடர்பான விதிமுறைகள், நிபந்தனைகள் எல்லாம் ஆய்வு செய்யப்பட்டு எளிமையாக்கப்படும்’’ என அறிவித்தார்.
அந்நிய நேரடி முதலீடு 100% ஆக உயர்த்தப்படுவதன் மூலம் காப்பீடுதுறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகளைச் செய்ய முன்வரும். இதன்மூலம், நாடு முழுவதும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். தற்போது நாட்டில் 25 ஆயுள் காப்பீடு நிறுவனங்களும், 34 பொது காப்பீடு நிறுவனங்களும் உள்ளன. காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீடு, கடந்த 2015-ம் ஆண்டில் 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன்பின் கடந்த 2021-ம் ஆண்டில் 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.