புதுடெல்லி: நடப்பு ஆண்டில் ரூ.1.14 கோடி வருமான வரி செலுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள இந்தியர் ஒருவர், “இவ்வளவு அதிக தொகையை வரியாகச் செலுத்துவது, நான் எனக்காக உழைக்காமல் வேறு யாரோ ஒருவருக்காக உழைப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
‘@poojaofficial5’ என்ற ‘எக்ஸ்’ பக்க கணக்கில் பகிரப்பட்ட இந்த பதிவில், தான் செலுத்திய வருமான வரி கணக்குத் தாக்கலின் சுருக்க புகைப்படத்தையும், ரூ.1.14 கோடி வரி செலுத்தியுள்ளதையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனது பதிவில், “அமெரிக்காவில் இருந்து எனக்குப் பல்வேறு வேலை வாய்ப்புகள் வந்த போதிலும், எனது வயதான பெற்றோரைக் கவனித்துக் கொள்வதற்காக நான் இந்தியாவிலேயே தங்க முடிவு செய்தேன்.
நாட்டின் மீது மதிப்பு உள்ளதால், வெளிநாடு செல்லும் எண்ணமும் எனக்கு இல்லை. என்றாலும், அரசுக்கு அதிக அளவில் வரி செலுத்தும் நேர்மையான வரி செலுத்துவோரின் கவலைகள் தொடர்ந்து கண்டுகொள்ளப்படாமலேயே விடப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் எழுப்பியுள்ள இந்த கேள்வி, இணைய பயனர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக அளவில் வரி செலுத்தும் குடிமக்களுக்கு, அதற்கு இணையான தரமான பொதுச் சேவைகள், உள்கட்டமைப்பு வசதிகள், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் பொறுப்புடைமை கிடைக்கிறதா என்பது குறித்துப் பலரும் விவாதித்து வருகின்றனர்.
அதில் ஒரு பயனர், “நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்கு வரி செலுத்துவது நமது கடமை. ஆனால், வரி செலுத்துபவர்கள் அதற்குப் பதிலாக வெளிப்படைத்தன்மையையும் சிறந்த பொதுச் சேவைகளையுமே எதிர்பார்க்கிறார்கள். நாம் பங்களிக்கும் வரித் தொகைக்கும் நமக்குக் கிடைக்கும் நன்மைகளுக்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும்,” எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “நாம் செலுத்தும் வரியின் அளவிற்கு ஏற்ப, மருத்துவக் கட்டணம், கல்விக்கட்டணம் போன்றவற்றில் குறிப்பிட்ட தொகையை திரும்பப் பெறும் வகையில் அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்,” என்று யோசனை தெரிவித்துள்ளார்.