ஹைதராபாத்: மேற்கு ஆசியப் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் எரிபொருள் சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ‘அஜா கன்சல்டிங் சர்வீசஸ்' தனது ஊழியர்களுக்காக மின்சார வாகனங்கள் மற்றும் கார்பூலிங் (வாகனப் பகிர்வு) முறையை ஊக்குவிக்கும் ‘பசுமை பணியிட இயக்கம்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பானிராஜ் ஜலிகாமா கூறும்போது, ”இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக, எரிபொருள் விலை உயர்ந்துள்ளதுடன், எரிபொருள் பற்றாக்குறை குறித்த கவலைகளுக்கும் வழிவகுத்துள்ளது. இதைச் சமாளிக்க பொதுமக்கள் கார்பூலிங் முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என்றும் பிரதமர் மோடி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு ஆதரவளிக்கும் வகையில், நான்கு சக்கர மின்சார வாகனங்களை வாங்கும் எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு ரூ.10,000, இரு சக்கர மின்சார வாகனங்களைத் தேர்ந்தெடுப்போருக்கு ரூ.5,000 மானியம் வழங்கப்படும்” என்றார்.