உலக அளவில் ‘பாதுகாப்பான முதலீடுகளின் புகலிடம்’ என்றும், ‘எரிசக்தி இயந்திரம்’ என்றும் வர்ணிக்கப்பட்ட வளைகுடா பிராந்தியம் இப்போது அமெரிக்கா - ஈரான் போரின் தாக்கத்தால் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது வளைகுடா நாடுகளின் முதுகெலும்பை உடைத்தது போல் ஆகிவிட்டது. இதன் தாக்கம் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் போன்ற தொழில் துறைகளுக்கும் பரவி, இறக்குமதியையும் முடக்கிப்போட்டது.
விமானப் பயணம், போக்குவரத்து, சரக்குக் கையாளுதல் மற்றும் தொழில்நுட்பச் சேவைகளும் சீர்குலைந்தன. முதலீடுகள் வெளியேற்றம் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகையிலும் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷகிரா நிகழ்ச்சி ரத்து... முடங்கிய சுற்றுலா...
அபுதாபி எத்திஹாட் பார்க்கில் ஏப்ரல் 4-ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த கொலம்பியப் பாடகி ஷகிராவின் இசை நிகழ்ச்சி மற்றும் எஃப்-1 கார் பந்தயம் ஆகியவை ஈரானின் தாக்குதல் அச்சத்தால் ரத்து செய்யப்பட்டன.
ஷகிராவின் இசை நிகழ்ச்சி மற்றும் கார் பந்தயம் ஆகியவை நடந்திருந்தால், அபுதாபி நகரின் ஹோட்டல்கள், உணவகங்கள், விமானப் போக்குவரத்து, உள்நாட்டுப் போக்குவரத்து, சில்லறை வணிகம் மற்றும் பல்வேறு சேவைத் துறைகளின் வருவாய் அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டது.
ஆனால், ஈரானின் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின் அந்நாட்டுடனான பொருளாதார உறவையும் நிதிப் பரிவர்த்தனைகளையும் ஐக்கிய அரபு அமீரகம் ரத்து செய்தது. இந்த கலை நிகழ்ச்சிகள் ரத்தானதால் பெரிய அளவிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
உலகப் பயணம் மற்றும் சுற்றுலாக் கவுன்சில் தகவல்படி, 2026-ஆம் ஆண்டில் சுற்றுலாப் பாதிப்பைச் சந்திக்கும் ஒரே பிராந்தியம் மத்திய கிழக்கு மட்டுமே. சுற்றுலா வளர்ச்சி 14.5% குறையும் என்றும், வருவாய் 38,600 கோடி டாலரிலிருந்து 33,000 கோடி டாலராகச் சரியும் என்றும் கணித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜிடிபியில் 11.9% பங்களிப்பையும், 13.6% வேலைவாய்ப்பையும் சுற்றுலாத் துறையே தருகிறது. சர்வதேசப் பயணிகளால் 57 பில்லியன் டாலர் பரிவர்த்தனை எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துபாய், ரியாத் ஹோட்டல்களும் வணிக வளாகங்களும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. 94.1% சுற்றுலாச் சார்பு கொண்ட கத்தாரும் முடங்கியுள்ளது.
முடங்கிய விமானப் போக்குவரத்து
வான்வெளி பாதுகாப்பற்றதாக மாறியதால் எமிரேட்ஸ், எத்திஹாட், கத்தார் ஏர்வேஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மார்ச் முதல் வாரத்தில் 85% விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகச் சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
வளைகுடா விமானப் போக்குவரத்தில் ஏற்பட்ட பாதிப்பு அதோடு நிற்காமல் ஆசியா, ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் பயணிகள் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மே மாதத்தில் கால் பகுதி சேவைகளும், ஜூன் - ஆகஸ்ட்டில் 3% சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் சர்வதேசக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
ஹார்முஸ் நீரிணை மூடல்...
உலகின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 20-30% பங்களிப்பு செய்யும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், சவுதி, குவைத், பஹ்ரைன் ஆகியவை உற்பத்தியைக் குறைத்தன. கத்தாரின் இயற்கை எரிவாயு ஏற்றுமதியும் சரிந்தது. வளைகுடா பொருளாதாரமே ஆட்டம் கண்டது.
ஏனெனில், வளைகுடா பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், வருவாயில் 70% பங்களிப்பைத் தருவதாகவும் இருப்பது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதிதான். ஹார்முஸ் அணை மூடல் வளைகுடா பொருளாதாரத்தையே முடக்கிப் போட்டது.
ஹார்முஸ் முரண்:
பொருளாதாரத்தில் ஒரு பொருளின் விலை உயரும்போது, அந்தப் பொருளை அதிகம் உற்பத்தி செய்து லாபம் அடைவதுதான் நிறுவனங்களின் வழக்கமான நடைமுறை. ஆனால், வளைகுடாவில் அதற்கு மாறாகவே நடந்தது. ஹார்முஸ் நீரிணை மூடலால் வளைகுடா நாடுகளில் இருந்து சர்வதேசச் சந்தைக்குக் கச்சா எண்ணெய் கொண்டு செல்வதில் சிக்கல் நிலவியது. இதனால், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலர் முதல் 120 டாலர் வரை அதிகரித்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும், உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்பும் கைவசம் அதிக எண்ணெய் வளங்களும் இருந்தபோதிலும், விலை உயர்வால் கிடைக்கும் லாபத்தை வளைகுடா நாடுகளால் பயன்படுத்த முடியாமல் போனது.
இறக்குமதிச் சிக்கல்
வளைகுடா நாடுகள் உணவுத் தேவையில் 80%-க்கும் அதிகமானவற்றை இறக்குமதியே செய்கின்றன. ஹார்முஸ் நீரிணை மூடலால் கப்பல்கள் ஆப்பிரிக்காவின் ‘நன்னம்பிக்கை முனை’ வழியாகச் சுற்றி வந்ததாலும், ‘போர் அபாயக் காப்பீட்டுக் கட்டணம்’ 10 மடங்கு உயர்ந்ததாலும், இறக்குமதிச் செலவு கூடி உணவுப் பொருட்களின் விலை 40% வரை அதிகரித்தது.
‘விஷன் 2030’ பின்னடைவு
போர் காரணமாக வளைகுடா நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 4.5% என்ற நிலையில் இருந்து 2.6% ஆகக் குறையும் என ஐஎம்எப் கணித்துள்ளது. ஒட்டுமொத்தப் பிராந்தியத்துக்கும் 120–140 பில்லியன் டாலர்கள் வரை இழப்பும் ஏற்பட்டுள்ளது.
சவுதி அரேபியா கனவுத் திட்டமான 500 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ‘நியோம்’ (NEOM) நகரத் திட்டத்துக்கான அந்நியநேரடி முதலீடுகள், உள்நாட்டு முதலீடுகள், அதிகம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போர் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறைந்தன. மத்திய கிழக்கின் அமைதிப் பூமி என்ற பிம்பம் உடைந்து, முதலீட்டாளர்கள் ஆசிய, ஐரோப்பியச் சந்தைகளுக்கு முதலீட்டை மாற்றத் தொடங்கினர்.
வேலை இழப்பும் பாதிப்பும்
வர்த்தகம், கட்டுமானம், சுற்றுலா முடங்கியதால், வளைகுடாவில் உள்ள 90 லட்சம் இந்தியர்கள் உட்பட லட்சக்கணக்கான ஆசியத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்துக்கு தள்ளப்பட்டனர். இதனால் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படும் 88 பில்லியன் டாலர்கள் பணப்பரிமாற்றம் பாதிக்கப்பட்டது, இந்தியப் பொருளாதாரத்திலும் சங்கிலித் தொடர் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஈரான் போர் ‘வளைகுடா ஒரு பாதுகாப்பான முதலீட்டு மையம்’ என்ற பிம்பத்தை உடைத்துள்ளது. வணிகப் பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடுவது சாத்தியமில்லை என்பதை இப்போரினால் ஏற்பட்ட பில்லியன் கணக்கிலான இழப்புகள் உணர்த்தியுள்ளன. பிராந்தியத்தில் அமைதி திரும்பும் வரை வளைகுடாவின் பொருளாதார மீட்சி சவாலாகவே தொடரும்.