பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியிலுள்ள சிறிய உணவகங்களில் விறகு அடுப்புகள் மூலம் உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள்.

 

படங்கள்: மு. லெட்சுமி அருண்

வணிகம்

காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: நெல்லையில் அல்வா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையால் சிறிய உணவகங்கள், டீக்கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் அல்வாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக விற்பனை யாளர்கள் தெரிவித்தனர்.

வளைகுடா நாடுகளில் போர் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுபோல், சமையல் எரிவாயு கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. திருநெல்வேலி, பாளையங்கோட்டையிலும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக சிறிய உணவகங்களும், டீக்கடைகளும் மூடப்பட்டு வருகின்றன.

          

குறிப்பாக வடை உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளில் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காததால் விற்பனை முற்றிலும் முடங்கியிருக்கிறது. தள்ளுவண்டி கடைகள், சாலையோர சிறிய உணவகங் களும் மூடப்பட்டு வருகின்றன.

சில கடைகள் காலை மற்றும் மாலை நேரங்கள் மட்டுமே செயல்படுகின்றன. பாளையங்கோட்டை தெற்கு பஜார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறிய உணவகங்களில் விறகு அடுப்புகளை பயன்படுத்தி உணவு தயாரிக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. இதற்காக விறகுகளை வாங்கி வருகிறார்கள்.

அதே நேரத்தில், பெரிய உணவகங்களில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களை கூடுதல் முன்பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், திருநெல்வேலியில் அல்வா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி சந்திப்பிலு ள்ள பிரபல இனிப்பு கடையில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அல்வா உற்பத்தியை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக விற்பனை யாளர்கள் தெரிவித்தனர்.

வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு தீர்ந்துவிட்டது. இதனால் அல்வா உற்பத்தியை நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. தற்போது தயாரித்த அல்வா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தியை நிறுத்தினால் ஓரிரு நாளில் அல்வா விற்பனை நடைபெறாது என்றும் கூறினர்.

அதே நேரத்தில் திருநெல் வேலி டவுனிலுள்ள பிரபல இருட்டு கடை அல்வா கடையில் விற்பனை வழக்கம்போல் நடைபெற்றது. ஆனால் அல்வாவின் விலை கிலோவுக்கு ரூ.400-ல் இருந்து ரூ.440 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோல் மாநகரில் சிறிய அல்வா கடைகளிலும் விற்பனை வழக்கம்போல் இருந்தது. எரிபொருளுக்கு எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தாமல் விறகு உள்ளிட்ட வேறுவிதமான எரிபொருள்களை பயன்படுத்தி அல்வா உற்பத்தி செய்யும் சிறிய கடைக்காரர்கள் வழக்கம்போல் அல்வா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT