வணிகம்

ரூ.10, ரூ.20 பிளாஸ்டிக் நோட்டுகளுக்கு அரசு அனுமதி: நிர்மலா சீதாராமன் தகவல்

அனலி

புதுடெல்லி:  இந்​தி​யா​வில் தற்​போதைய காகித நோட்டுகளுக்குப் பதிலாக, பிளாஸ்​டிக் (பாலிமர்) ரூபாய் நோட்​டு​களை அறி​முகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்​ட​மிட்டுள்​ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பு கொண்ட தலா 100 கோடி எண்ணிக்கையிலான பாலிமர் நோட்டுகளை அச்சிட்டு களச் சோதனைக்கு உட்படுத்த அரசு அனுமதியளித்துள்ளதாக மாநிலங்களவையில் அளித்த எழுத்துபூர்வமான பதிலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் மாநிலங்களவைக்கு அளித்த அந்தப் பதிலில், “இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது மத்திய வாரியத்தின் பரிந்துரையின்பேரில், 1934-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் 25-ம் பிரிவின்படி, களச் சோதனைகளுக்காக தலா 100 கோடி ரூபாய் 10 மற்றும் ரூபாய் 20 பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்தவும், களச் சோதனைகள் வெற்றிகரமாக முடிந்த பிறகு இந்த இரண்டு மதிப்புகளிலும் பாலிமர் நோட்டுகளை புழக்கத்தில் விடவும் அரசுக்கு ஒரு முன்மொழிவை அனுப்பியிருந்தது.

அதற்கு அரசு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. ஆர்பிஐ தகவலின்படி இந்த பாலிமர் நோட்டுகள் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள காகிதத்திலான ரூபாய் நோட்டுகளுடன் பயன்பாட்டில் இருக்கும்.

மேலும், இதற்கான மூலப்பொருள் கொள்முதல் ஆரம்ப நிலையில் இருக்கிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே இப்போதைக்கு, பாலிமர் நோட்டுகள் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற கால நேரத்தை குறிப்பிட்டுச் சொல்ல இயலாது” என்று தெரிவித்துள்ளார்.

பிளாஸ்​டிக் நோட்​டு​களைத் தயாரிக்​கத் தேவை​யான பிரத்யேக தாள்​களை வழங்க, உலகளா​விய நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்​கி​யின் நோட்டு அச்​சிடும் பிரிவு அழைப்பு விடுத்​துள்​ளது. அதிநவீன பாது​காப்பு அம்சங்​கள் கொண்ட இந்​தத் தாள்​களை வழங்க விண்ணப்பிக்க ஆகஸ்ட் 18 கடைசி நாளாகும். சாதாரண காகித நோட்​டு​களை விட பிளாஸ்​டிக் நோட்​டு​கள் நீண்ட காலம் உழைக்​கும். இவை தண்​ணீர், அழுக்கு அல்​லது எண்​ணெ​யால் எளி​தில் பாழா​காது.

மேலும், இவற்றை நகல் எடுப்​பது மிகக் கடினம் என்​ப​தால், கள்ள நோட்​டுப் புழக்​கத்தை முற்​றி​லு​மாகத் தடுக்க முடியும். ஆஸ்​திரேலி​யா, கனடா, பிரிட்​டன் போன்ற நாடுகள் ஏற்​க​னவே இந்த முறையைப் பயன்​படுத்தி வருகின்றன என்​பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் சீதாராமன், “நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) மூலம் அளவிடப்படும் சராசரி சில்லறை பணவீக்கமானது, 2023-24ல் 5.4 சதவீதத்திலிருந்து 2024-25ல் 4.6 சதவீதமாகவும், மேலும் 2025-26ல் 2.1 சதவீதமாகவும் சீராகக் குறைந்துள்ளது” என்று கூறினார்.

அதேவேளையில், “மேற்கு ஆசிய நெருக்கடியால் ஏற்பட்ட விலையேற்றம் மற்றும் சர்வதேச அளவில் எகிறிய எரிசக்தி விலை, பருவகாலத்துக்கு ஏற்ப மாறிய காய்கறி விலைகள் மற்றும் எல் நினோ தாக்கம் ஆகியவற்றின் காரணமாக, 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் சில்லறைப் பணவீக்கம் 3.9 சதவீதமாக உயர்ந்துள்ளது” என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இருப்பினும், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 4%-க்கு கீழ் இருக்கிறது என்றும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT