சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 4-வது நாளாக சரிந்துள்ளது. அதன்படி இன்று (ஜூலை 9) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றமும், இறக்கமும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் தங்கத்தின் விலை ஜூலை பிறந்ததில் இருந்து சில நாட்கள் உயர்ந்த நிலையில் ஜூலை 4, 5 தேதிகளில் மாற்றமின்றி விற்பனையானது. இந்நிலையில் ஜூலை 6 தொடங்கி இன்று ஜூலை 9-ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை மாற்றம் கண்டது. காலையில் கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் குறைந்திருந்தது, பின்னர் மாலையில் கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் குறைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 2 முறை விலை மாற்றம் கண்டு, தங்கம் விலை மொத்தத்தில் கிராமுக்கு ரூ.150-ம், பவுனுக்கு ரூ.1,200-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13,250-க்கும், ஒரு பவுன் ரூ.1,06,000-க்கும் விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்:
இந்நிலையில் தங்கம் விலை இன்று (ஜூலை 9) கிராமுக்கு ரூ.30-ம், பவுனுக்கு ரூ.240-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,220-க்கும், ஒரு பவுன் ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.480-ம், பவுனுக்கு ரூ.3,600-ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய மாலை மாற்றம் ஏதும் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தங்கம் விலை சரிவது நகை வாங்குவோர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் அமெரிக்க டாலரில்தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயரும்போது, தங்கம் பிற நாட்டு முதலீட்டாளர்களுக்கு விலை உயர்ந்ததாக மாறுகிறது. இதன் காரணமாகத் தங்கம் மீதான முதலீட்டுத் தேவை குறைகிறது. தேவை குறையும்போது தங்கத்தின் விலையும் குறைகிறது.
அதுமட்டுமல்லாது, தங்கம் விலை ஏற்கெனவே உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கிய தங்கத்தை விற்று லாபத்தை எடுக்கத் தொடங்கும் ப்ராஃபிட் புக்கிங் போக்கும் அதிகரிப்பதால், அது தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.245-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.