கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின்னர் சென்னையில் நவ.17 அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்துக்கும் கீழாக குறைந்தது. இது நகை வாங்குவது என்பது எட்டாக்கனியாகிப் போன சிலருக்கு மகிழ்ச்சிகரமான செய்திதான். என்றாலும், தங்கம் மற்றும் வெள்ளி விலையின் இந்த திடீர் சரிவு ஏன்? இது இன்னும் எதை நோக்கி நகரும் என்பன போன்ற கேள்விகள் முதலீட்டாளர்கள் மட்டுமல்லாது சாமானிய மக்கள் மத்தியிலும் எழுந்தியிருப்பதை மறுப்பதற்கு இல்லை.
ஏற்றமும் இறக்கமும்!
கடந்த சில ஆண்டுகளில் அபார உச்சம் தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை, 2026-ல் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்தன. இதற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் குறித்த கவலைகள் மற்றும் அமெரிக்க வட்டி விகிதங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் மிக முக்கியமானவை என்று கூறலாம்.
ஆனால், சமீப காலமாக அமெரிக்க டாலர் வலுவடைந்த நிலையில், பத்திர வருவாயும் அதிகரித்தது. அதுவே தங்கம், வெள்ளி மீதான முதலீட்டாளர்களின் ஈர்ப்பை வெகுவாகக் குறைத்தது. இதில் வெள்ளிதான் சரிவின் அதிக தாக்கத்தை சந்தித்துள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.99,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.70 குறைந்து ரூ.12,470 ஆக இருந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத் தங்கம் விலை ரூ.6,000-க்கும் மேலாக வீழ்ச்சி கண்டது கவனிக்கத்தக்கது.
உள்நாட்டில் தங்கம் விலை தற்போது 10 கிராமுக்கு சுமார் ரூ.1.37 லட்சம் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இது ஜனவரி மாத உச்சமான சுமார் ரூ.1.80 லட்சத்தில் இருந்து 23%-க்கும் அதிகமாக குறைந்துள்ளது
அதேவேளையில் வெள்ளி, ஜனவரி 29, 2026 அன்று மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) பதிவான சாதனை உச்சமான கிலோவுக்கு ரூ.4,20,048-ல் இருந்து கிட்டத்தட்ட 55% சரிந்து, தற்போது உள்நாட்டு சில்லறை விலை கிலோவுக்கு சுமார் ரூ.1.90 லட்சம் என்ற அளவில் உள்ளது.
புவிசார் அரசியல் நிச்சயமின்மை, வரி (tariff) விதிப்புக் கவலைகள் ஆகியவற்றால் உந்தப்பட்ட அசாதாரண ஏற்றத்துக்குப் பிறகு தங்கம், வெள்ளி விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி சரிவு ஏன்?
தங்கம் விலை உயர்வுக்கு மிகப் பெரிய தூண்டுதலாக இருந்தது, அமெரிக்க பணக் கொள்கை குறித்த எதிர்பார்ப்புகளில் ஏற்பட்ட மாற்றம்தான். வலுவான முதலீட்டு தேவை, புவிசார் அரசியல் நிச்சயமின்மை மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றால், தங்கம் ஜனவரி 2026-ல் அவுன்ஸுக்கு கிட்டத்தட்ட 5,595 டாலர் என்ற சாதனை உச்சத்தை தொட்டது.
இருப்பினும், ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சம்பந்தப்பட்ட மோதல் கச்சா எண்ணெய் விலையை பேரலுக்கு சுமார் 60 டாலரில் இருந்து 120 டாலராக கடுமையாக உயர்த்தியது. இது புதிய பணவீக்க சுழற்சி குறித்த அச்சத்தைத் தூண்டியது.
இதன் விளைவாக சந்தைகள் வட்டி குறைப்பு எதிர்பார்ப்பில் இருந்து, ஃபெட் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் மற்றும் வட்டி உயர்வு ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மாறின.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் செப்டம்பரில் தனது அடிப்படை வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி, 3.75-4% என்ற இலக்கு வரம்புக்கு கொண்டு சென்றது. அக்டோபரில் விகிதங்களை அப்படியே வைத்திருந்தது. இரண்டு உறுப்பினர்கள் மேலும் 25 அடிப்படை புள்ளிகள் உயர்வுக்கு ஆதரவாக வேறுபட்ட கருத்தை தெரிவித்தனர். இது தொடர்ந்து நீடிக்கும் பணவீக்கம் குறித்த கவலையை பிரதிபலிக்கிறது.
அதிக வட்டி விகிதங்கள் மற்றும் பத்திர வருவாய், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற வருமானம் தராத சொத்துக்களை குறைவாக கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றன. வலுவான டாலர் இந்த அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. டாலர் குறியீடு (Dollar Index) சமீபத்தில் சுமார் 4% உயர்ந்துள்ளதாக ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் குறிப்பிட்டுள்ளது. இது தங்கம் விலையை பாதித்துள்ளது.
சாதனை உச்சத்துக்கு பிறகு லாபத்துக்காக விற்பனை செய்தல் ஆகியவை விலை மாற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
வெள்ளி ஏன் இன்னும் கடுமையாக சரிந்தது?
வெள்ளியின் அதிக விலை ஏற்ற இறக்கம் மற்றும் தொழில் துறை தேவைக்கான உணர்திறன் ஆகியவை தங்கத்தை விட அதை அதிகம் பாதிக்கப்படக் கூடியதாக ஆக்கியுள்ளது. சர்வதேச வெள்ளி விலை ஜனவரி 29 அன்று அவுன்ஸுக்கு 121 டாலர் என்ற சாதனையை தொட்டு, பின்னர் கிட்டத்தட்ட 48 டாலராக சரிந்தது. இது சுமார் 60% சரிவாகும்.
இந்த விலை வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம், சந்தையில் வெள்ளி கிடைப்பது அதிகரித்ததுதான். முன்பு வெள்ளிக்கு கடும் தட்டுப்பாடு இருந்தது. இப்போது நியூயார்க்கில் இருந்த வெள்ளி இருப்புகள் மீண்டும் லண்டனுக்கு வந்ததால், சந்தையில் வெள்ளி எளிதாக கிடைக்கத் தொடங்கியது. இதனால் விலை உயர்வுக்கு இருந்த ஒரு முக்கிய காரணம் இல்லாமல் போனது.அதே நேரத்தில், தொழிற்சாலைகளில் வெள்ளி தேவை குறையுமோ என்ற கவலையும், விநியோகப் பற்றாக்குறை குறைந்ததும் விலையை மேலும் அழுத்தியது.
ஹெச்எஸ்பிசி ஆய்வறிக்கையின்படி, ஜனவரியில் தங்கம்-வெள்ளி விலை விகிதம் 46:1 என்ற அளவில் இருந்தது. இப்போது அது 72:1 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது, தங்கத்தை விட வெள்ளி விலை மிகவும் அதிகமாக சரிந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.
இனி என்ன நடக்கும்?
இனி, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் வட்டி விகித போக்குதான் தங்கம், வெள்ளி விலையின் திசையை தீர்மானிக்கும். வெள்ளி விலை படிப்படியாக மீளும் என்று ஹெச்எஸ்பிசி எதிர்பார்க்கிறது. ஆனால் குறுகிய காலத்தில் கடுமையான ஏற்றத்தை எதிர்பார்க்கவில்லை.
"வரி தொடர்பான பெரிய பிரச்சினைகள் மீண்டும் வெடிக்காதவரை, வெள்ளி விலை விரைவில் 100 டாலர் என்ற அளவை தொடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்று ஹெச்எஸ்பிசி தெரிவித்துள்ளது.2027-ம் ஆண்டுக்கும் அந்த நிறுவனம் மிகவும் கவனமான கணிப்பையே வெளியிட்டுள்ளது. ஆனால் தங்கம் விலை நிலையாக இருப்பது வெள்ளிக்கு ஓரளவு ஆதரவாக இருக்கும் என்றும் அது கூறியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் டிசம்பரில் ஃபெட் ரிசர்வ், வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
அதே நேரத்தில், அமெரிக்கக் கருவூல பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு, டாலர் வலுப்பெற்றது மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை தங்கத்தை லாபத்துக்காக விற்பனை செய்யும் அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளன. இருந்தாலும், சீனா உள்ளிட்ட மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி வருவதும், தங்க ETF-களில் முதலீடு அதிகமாக இருப்பதும் விலைக்கு ஓரளவு ஆதரவாக உள்ளன.
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இனி என்ன நடக்கும் என்பதை பார்க்க, முக்கியமான விலை நிலைகளை கவனிக்க வேண்டும். தற்போது முக்கிய ஆதரவு நிலைகள் உடைக்கப்பட்டுள்ளதால், விலை இன்னும் சரிய வாய்ப்பு உள்ளது. ( ஆதரவு நிலை என்பது விலை சரியும்போது மேலும் சரியாமல் தாங்கி நிற்கும் என்று எதிர்பார்க்கப்படும் விலை அளவு.)
தங்கம் வாங்கலாமா?
இந்தச் சூழலில், “மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி வருவதும், உலக பொருளாதார நிலை குறித்த கவலைகள் நீடிப்பதும் தங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளன. எனவே நீண்ட கால முதலீட்டாளர்கள் விலை சரியும்போது சிறிது சிறிதாக வாங்குவதை பரிசீலிக்கலாம்.
சாமானிய மக்களை பொறுத்தவரையிலும், விலை சரிவை பயன்படுத்தி சிறிது சிறிதாக தங்கம் வாங்குவது பாதுகாப்பானதாக இருக்கும்” என்கின்றனர் நிபுணர்கள்.
இருப்பினும் தனிநபர்கள் தங்கள் முதலீடுகளை தேர்ந்த பொருளாதார நிபுணர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் மேற்கொள்வதே நலம் பயக்கும்.