வணிகம்

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை - இன்றைய சந்தை நிலவரம் என்ன?

மோகன் கணபதி

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.30) சென்னையில் கிராமுக்கு ரூ.70 உயர்ந்தும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த 4 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று உயர்ந்திருக்கிறது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதோடு கடந்த 1-ம் தேதி அன்று ‘தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது. இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை நேற்றுமுன்தினம் (திங்கள்கிழமை) பவுனுக்கு ரூ.2,680 என அதிரடியாகக் குறைந்தது. நேற்று (செவ்வாய்கிழமை) பவுனுக்கு ரூ.200 குறைந்தது.

இன்றைய விலை விவரம்: இந்நிலையில், சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,710-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,09,680-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.245-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்து, ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை ஆகிறது.

SCROLL FOR NEXT