சென்னை: தங்கம் விலை இப்போது வெகுவாகக் குறைந்து வரும் சூழலில், எளிய மக்கள் தங்களின் சேமிப்பை தங்கத்தின் மீது முதலீடு செய்யலாமா? - இது குறித்த தெளிவுப் பார்வை இது...
தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.10,000 வரை சரிந்துள்ளது. 2026 ஜனவரி தொடங்கியதில் இருந்து தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு சென்ற நிலையில், இந்த விலை சரிவு சாமானிய மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
இதனையொட்டி, தங்களால் இயன்ற அளவில் தங்கத்தை வாங்கிவிட வேண்டும் என்ற சாமானியர்களின் ஆசையும் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. இந்த நிலையில், தங்கம் வாங்க இது உகந்த சூழலா என்பது குறித்து சலானி குழுமத் தலைவர், சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானியுடன் பேசியதில் இருந்து...
1. தங்கம் விலை இப்போது வெகுவாகக் குறைந்து வரும் சூழலில், எளிய மக்கள் தங்களின் சேமிப்பை தங்கத்தின் மீது முதலீடு செய்யலாமா?
“தங்கம் விலை கடந்த ஜனவரியில் பவுன் ரூ.1,34,000 ஆக இருந்தது. இன்று ஒரு பவுன் ரூ.95,840 ஆக உள்ளது. இது 28.5% வரை குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்துள்ள இந்த வேளையில் எளிய மக்கள் தங்களுடைய சேமிப்பை நிச்சயமாக தங்கம் வாங்குவதில் செலவிடலாம்.
ஏனென்றால், தங்கம் விலை சரிவானது நவம்பர் இறுதி, மிஞ்சிப்போனால் டிசம்பர் முதல் வாரம் வரையே நீடிப்பதற்கான சாத்தியங்கள் நிலவுகின்றன. டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித முடிவால், டாலர் வலுவடைந்து தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து விலை குறைகிறது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவைப் பொறுத்தே தங்கத்தின் அடுத்தப் போக்கு அமையும்.
அதிகபட்சமாக பவுனுக்கு இன்னும் 1000 முதல் 2000 ரூபாய் வேண்டுமானால் குறையலாம். எனவே, தங்கத்தின் மீதான முதலீடு இந்த வேளையில் சரியே.”
2. அவ்வாறு முதலீடு செய்வதாக இருந்தால், எந்தெந்த வழிமுறைகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது?
“சாமானிய மக்களுக்கு நான் எப்போதும் பரிந்துரைப்பது தங்களிடம் இருக்கும் பணத்தில் தங்க நகை அல்லது தங்கக் காசு. இவற்றை வாங்கும்போது ஹால்மார்க் முத்திரை இருப்பதையும், ரசீது பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும். தங்கத்துக்கு குறைந்தபட்ச வரிதான் விதிக்கப்படுகிறது. அதனால் அளவில் சிறியதாக இருந்தாலும் ரசீதுடன் வாங்க வேண்டும்.
தங்கத்தின் மீதான முதலீடு என்பதை நீண்டகால முதலீடாகவே திட்டமிட வேண்டும். அதாவது, குறைந்தது 2 ஆண்டுகளாவது நம்மிடம் அந்தத் தங்கத்தை வைத்திருப்பதாக அமைத்துக் கொள்ள வேண்டும்.”
3. சேமிப்பு இல்லாத சிலர் தங்களிடமிருக்கும் நகையை அடகு வைத்து, அந்தத் தொகையில் தங்கம் வாங்க முற்படுவது சரியான அணுகுமுறையா? இதன் மூலம் சில மாதங்களில் ஓரளவு லாபம் ஈட்டுவது சாத்தியம்தானா?
“இது மிக மோசமான அணுகுமுறை. நம்மிடம் உள்ள சேமிப்பில் இருந்துதான் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். கடன் வாங்கி முதலீடு செய்வது எத்தனை அபத்தமோ அதேபோலத்தான் இருக்கும் நகையை அடகுவைத்து முதலீடு செய்வதும். அதுவும் கடன்தான். அதற்கு வட்டி கட்ட வேண்டும். மேலும், அடகு வைத்த பொருளை திருப்ப வேண்டும்.
இப்போது குறையும்போது வாங்கி, அதிகரிக்கும்போது விற்கலாம் என்பதற்கு தங்கம் விலை நிச்சயமானதாக இருக்கப் போவதில்லை. அதைத் தீர்மானிப்பவை சர்வதேச பொருளாதார சூழல், அரசியல் சூழல் உள்ளிட்ட இன்னும் பல காரணிகள்.
பொதுவாக போர் மூண்டால் தங்கம் விலை உயரும். உக்ரைன் - ரஷ்யா போரில் அதை நாம் உணர்ந்தோம். ஆனால் ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போரில் மட்டும் தங்கம் விலை குறைகிறது. காரணம், இந்தப் போரின் பின்னணியில் உள்ளது கச்சா எண்ணெய்.
இதனால், இந்தப் போர் மூண்டதுமே தங்கம் மீதான முதலீடு குறைந்து கச்சா எண்ணெய் மீதான முதலீடு அதிகரித்ததன் விளைவாகவும் தங்கம் விலை இந்தச் சரிவை சந்தித்துள்ளது.
எனவே, இதுபோன்ற நிச்சயமற்ற சூழலில் எளிய, சாமானிய மக்கள் தங்கத்தை அடகுவைத்து புதிதாக தங்கம் வாங்குவது சரியான அணுகுமுறை அல்ல” என்றார் ஜெயந்திலால் சலானி கூறினார்.
இந்த ஆலோசனைகளை வைத்துப் பார்க்கும்போது, சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித முடிவு குறித்த எதிர்பார்ப்பு, வலிமையாகும் அமெரிக்க டாலர், அதிக வட்டி தரும் பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்குவது ஆகிய காரணங்களால், தங்கத்தின் விலை தொடர் சரிவில் இருக்கிறது என்பது எளிய மக்களும் புரிந்துகொள்ள முடியும்.
இவற்றில் டிசம்பர் முதல் வாரம் வெளியாகும் ஃபெட் ரிசர்வ் வட்டி விகிதம்தான் தங்கத்தின் விலை மீதான அடுத்த போக்கை நிர்ணயிப்பதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, எளிய மக்கள் முதலீடுகள் தங்களது தனிப்பட்ட பொருளாதார சூழல்களை சீர்தூக்கிப் பார்த்து நிதானமாக முதலீடு செய்வதே சிறந்ததாக இருக்கும்.
முதலீட்டு விஷயங்களில் எந்தப் பரிந்துரையும் அனைவருக்கும் பொதுவான பரிந்துரையாக இருந்துவிட முடியாது. அதைப்போலத்தான் இப்போது தங்கத்தை அடகு வைத்து புதிதாக தங்கம் வாங்குவதும் கூட. சந்தை அபாயங்களுக்கு உட்பட்டதே என்பதை சாமானியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்களின் நிலையான கருத்தாக இருக்கிறது.
மேலும், இதுபோன்ற சூழல்களில் சமூக வலைதள ரீல்களை மட்டும் நம்பாமல், அனுபவம் வாய்ந்த வியாபாரிகள் மற்றும் நிபுணர்களிடம் நேரடியாக கேட்டு முடிவெடுங்கள் என்பதே பொருளாதார நிபுணர்களின் பரிந்துரையாக உள்ளது.