வணிகம்

வரலாறு காணாத உச்சத்தை நோக்கி நகரும் தங்கம்: பவுன் விலை ரூ.1.34 லட்சம் தாண்டியது

ஒரே நாளில் ரூ.9,520 அதிகரித்ததால் மக்கள் திகைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை நேற்று ரூ.1.34 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாகவே வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2025 ஜன.3-ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் விலை ரூ.58,080 ஆக இருந்தது. படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த டிச.15-ம் தேதி ரூ.1 லட்சத்தை தாண்டியது.

          

அமெரிக்க அதிபராக டிரம்ப் 2-வது முறையாக பொறுப்பேற்ற பிறகு வெளியிட்ட அறிவிப்புகள், குறிப்பாக, இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு, எச்1பி விசா கட்டணத்தை உயர்த்தியது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

2026-ம் ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை உயர்ந்து வந்தது. சென்னையில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.15,610, ஒரு பவுன் ரூ.1,24,880 ஆக இருந்தது. கிலோ வெள்ளி விலை ரூ.4 லட்சமாக இருந்தது.

இந்நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1,190 என பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்தது. இதனால், கிராம் விலை ரூ.16,800, பவுன் விலை ரூ.1,34,400 என அதிகரித்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. 24 காரட் சுத்த தங்கம் விலை ரூ.1,46,616 ஆக இருந்தது.

வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. நேற்று முன்தினம் வெள்ளி ஒரு கிராம் ரூ.400, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.4,00,000 இருந்த நிலையில், நேற்று வெள்ளி கிராமுக்கு ரூ.25 என கிலோவுக்கு ரூ.25,000 உயர்ந்தது. இதனால், வெள்ளி ஒரு கிராம் ரூ.425, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.4,25,000 என உயர்ந்தது. வரலாறு காணாத அளவுக்கு தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததால், சுபகாரியங்களுக்கு நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விலை உயர்வு குறித்து சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியதாவது: ஈரானில் போர் பதற்றம், சர்வதேச பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால் பெரும் முதலீட்டாளர்களின் பார்வை, பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதுதவிர, மத்திய பட்ஜெட் பிப்.1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், அதில் தங்கம் தொடர்பான அறிவிப்புகள் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பு போன்றவற்றால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருளாதார நிபுணர்கள் கூறியபோது, ‘‘அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்பாடுகளால் தென் கொரியா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் டாலர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் டாலரை விற்றுவிட்டு, தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. இதன் விளைவாகவே, கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே தங்கம் விலை 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சீனா வெள்ளியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாததால், உலக சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வெள்ளி விலை அதிகரிக்கிறது’’ என்றனர்.

53 முறை புதிய உச்சம் தொட்ட தங்கம்: உலக தங்க கவுன்சில் தகவல் - தங்கம் விலை உயர்வு மற்றும் நுகர்வோரின் வாங்கும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 2024-ல் 802.8 டன்னாக இருந்த தங்கத்துக்கான தேவை 2025-ல் 11 சதவீதம் குறைந்து 710.9 டன்னாக சரிந்துள்ளது. நடப்பு 2026-ம் ஆண்டில் இதன் தேவை 600 முதல் 700 டன்களாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அளவு அடிப்படையில் தேவை குறைந்தாலும், விலை உயர்வால் தங்கத்தின் மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. 2024-ல் ரூ.5,75,930 கோடியாக இருந்த தங்கத்தின் மதிப்பு, 2025-ல் 30 சதவீதம் உயர்ந்து ரூ.7,51,490 கோடியாக அதிகரித்துள்ளது.

2024 ஜனவரியில் 10 கிராம் தங்கம் ரூ. 70,754 ஆக இருந்த நிலையில், 2025 ஜனவரி 1-ல் விலை 67 சதவீதம் உயர்ந்து ரூ. 1,01,572 ஆக அதிகரித்தது. 2025-ல் மட்டும் தங்கம் விலை 53 முறை புதிய உச்சத்தை தொட்டுள்ளது என்று உலக தங்க கவுன்சில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT