கோப்புப் படம்
சென்னை: ஆபரணத் தங்கம் விலை இன்று (ஜன.20) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,600 உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது, ஒரு பவுன் தங்கம் ரூ.1,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 என உயர்ந்து, ரூ.13,610-க்கு விற்பனை செய்யப்பட்டது. பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ரூ.1,08,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.1,18,776-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தங்கம் விலை மாலையில் மீண்டும் ரூ.2,320 அதிகரித்து ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, பவுனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வரலாறு காணாத விலையேற்றத்தில் வெள்ளி விலையும் உள்ளது. அதாவது, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 கூடி ரூ.340-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3,40, 000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, “உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை, கிரீன்லாந்து பிரச்சினை, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தங்கத்தில் மீது அதிக முதலீடு செய்வது போன்ற காரணங்களால், தங்கத்தின் தேவை உயர்ந்து, விலை உயர்ந்துள்ளது. இது போலவே வெள்ளியும் தொழில்துறை பயன்பாட்டுக்கு அதிகளவில் வாங்கப்படுவதால், விலை உயர்கிறது” என்றார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 90.97 ஆக வீழ்ச்சி கண்டுள்ளதும் தங்கம் விலை சரிவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச் சந்தையில் வீழ்ச்சி: இதனிடையே, மும்பை பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் 1,065.71 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 82,180.47 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 353.00 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 25,232.50 ஆகவும் நிலை கொண்டிருந்தது.