வணிகம்

தங்கம் விலை குறைவு நீடிப்பு: தொடர் சரிவுக்கு காரணம் என்ன?

வேட்டையன்

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.29) சென்னையில் பவுனுக்கு ரூ.200 என்று குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 குறைந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதோடு கடந்த 1-ம் தேதி அன்று ‘தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது. இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை நேற்று (திங்கள்கிழமை) பவுனுக்கு ரூ.2,680 என குறைந்தது. நேற்று காலை பவுனுக்கு ரூ.1,880 என தங்கம் விலை குறைந்த நிலையில், மாலையில் பவுனுக்கு மேலும் ரூ.800 குறைந்தது.

இன்றைய விலை விவரம்

இந்நிலையில், சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,640-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,09,120-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.240-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனை ஆகிறது.

தொடர் சரிவுக்குக் காரணம் என்ன?

அமெரிக்க ஃபெடரல் வங்கி வரும் அக்டோபரில் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏமன் மற்றும் சவுதி அரேபியா இடையே நடந்து வரும் அண்மைய கால மோதலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் உயர்ந்துள்ளது. இவை தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்துள்ளன.

தொடர்ந்து டாலரின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது. டாலர் வலுவடையும் போது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இயல்பாகவே குறைகிறது. இந்தச் சூழலில் தங்கம் விலை மேலும் சரிவை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளதாகச் சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை எதிர்கொண்டுள்ளன. நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1,124 புள்ளிகள் சரிந்த நிலையில், இன்று காலை பங்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் மேலும் 656+ புள்ளிகள் சரிந்து, 72,115 என்ற நிலையை எட்டியுள்ளது.

SCROLL FOR NEXT