சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) பவுனுக்கு ரூ.400 என உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக சரிவை கண்டிருந்த தங்கம் விலை இன்று சந்தையில் ஏற்றம் கண்டுள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தச் சூழலில், தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக சர்வதேச நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்ற காரணத்தால் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் தங்கத்தின் விலையில் எதிரொலித்து வருகிறது.
கடந்த 12-ம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தக்து. இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,11,600-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,21,744-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளியை பொறுத்தவரையில் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ கட்டி விலை கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,60,000-க்கு விற்பனை ஆகிறது.