வணிகம்

தற்காலிக போர் நிறுத்தம் எதிரொலி: தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,720 உயர்வு

வேட்டையன்

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஏப்.8) பவுனுக்கு ரூ.2,720 என விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.10,000 என விலை உயர்ந்துள்ளது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்தச் சூழலில், ஈரான் மீது இரண்டு வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. 

இந்த இடைக்கால போர் நிறுத்தம் சர்வதேச அளவில் வணிகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் இது எதிரொலித்துள்ளது.

இன்று காலை இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இந்தச் சூழலில் இன்று தங்கம் விலையும் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.340 மற்றும் பவுனுக்கு ரூ.2,720 என விலை உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கும், ஒரு பவுன் ரூ.1,13,600-க்கும் விற்பனை ஆகிறது.

24 காரட் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.15,491 மற்றும் ஒரு பவுன் ரூ.1,23,928-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 என உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை ஆகிறது.

SCROLL FOR NEXT