கோப்புப்படம்

 
வணிகம்

மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்: ரூ.1.25 லட்சத்தை நெருங்கும் தங்கம்

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,200 அதிகரித்தது

செய்திப்பிரிவு

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.5,200 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 24,880-க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையும் அதிகரித்தது.

சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. அந்த வகையில், டிச.15-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. ஜன.19-ம் தேதி ரூ.1 லட்சத்து 7,600-ஆக இருந்த ஆபரணத் தங்கம், ஜன.26-ம் தேதி ரூ.1 லட்சத்து 20,200 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் (ஜன.27) தங்கம் விலை சற்று குறைந்திருந்தது.

          

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.5,200 உயர்ந்து ரூ.1 லட்சத்து 24,880-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.650 உயர்ந்து ரூ.15,610 ஆக இருந்தது. 24 காரட் 8 கிராம் தங்கம் ரூ.1 லட்சத்து 36,232-க்கு விற்கப்பட்டது. இதுபோல, வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.13 உயர்ந்து, ரூ.400 ஆகவும் கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.13,000 உயர்ந்து, ரூ.4 லட்சமாகவும் இருந்தது.

தங்கம் விலை உயர்வால், குடும்ப நிகழ்ச்சிக்காக நகை வாங்க எண்ணியிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை உயர்வு குறித்து, தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

ஈரானில் உள்நாட்டு கலவரம், அந்நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்ற போர் அச்சம், சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி போன்றவற்றால் பெரும் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. தவிர, தங்கத்தின் சப்ளை குறைந்து தேவை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT