சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மீண்டும் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 440-க்கு விற்கப்பட்டது. இதனால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு டிச.15-ல் ஒரு பவுன்ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்கப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் விலை சற்று இறங்கினாலும், பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. குறிப்பாக, ஜன. 29-ம் தேதி வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-ஆக அதிகரித்தது. தொடர்ந்து, ஏற்ற இறக்கமாக இருந்து வந்த தங்கம் விலை கடந்த 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை குறைந்து வந்தது. குறிப்பாக, கடந்த 18-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 830-ஆக இருந்தது. 19-ம் தேதி ரூ.1 லட்சத்து 16 ஆயிரமாகவும், 20-ம் தேதி ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 360 ஆகவும் இருந்தது.
இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மீண்டும் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 440-க்கு விற்கப்பட்டது. இதனால், நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிராம் தங்கம் ரூ.260 உயர்ந்து ரூ.14,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல, 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 112-க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ரூ.290 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் உயர்ந்து, ரூ.2 லட்சத்து 90 ஆயிரமாகவும் இருந்தது.
விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.சாந்தக் குமார் கூறியதாவது: சர்வதேச அளவில் தங்கம் விலையில் நிலையற்ற தன்மை உள்ளது. ஒவ்வொரு நாளும் வெளியாகும் வெவ்வேறு அறிவிப்புகள் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த உலகளாவிய வரி விதிப்பு ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்று கூறி, அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி அதை ரத்து செய்தது. இதற்கு மாற்றுத் திட்டம் இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
இதுதவிர, அணு ஆயுத ஒப்பந்தத்தில் 10 நாட்களில் கையெழுத்திட ஈரானுக்கு அமெரிக்கா கெடு விதித்துள்ளது. மேலும், மத்தியக்கிழக்கு நாடுகள் அருகே தனது படைகளையும் அமெரிக்கா தயார் நிலையில் வைத்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வளைகுடாவில் ரஷ்யாவுடன் இணைந்து ஈரான் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகிறது. இதனால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இது போன்ற காரணங்களால், தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. எனவே, தங்கம் விலை உயர்ந்துள்ளது.
தொழில் துறையில் வெள்ளியின் தேவை அதிகரிப்பதால், அதன் விலையும் உயர்ந்து வருகிறது. ஒரிரு வாரங்கள் வரை தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.