சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் இன்று (மார்ச் 6) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,280 என குறைந்தது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 என சரிந்தது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தச் சூழலில், தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் பெரிய அளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து சரியும் தங்கம் விலை: தங்கம் விலை மார்ச் 2-ம் தேதி பவுனுக்கு ரூ.920 என குறைந்தது. அதன் பின்னர் மார்ச் 3 - ரூ.1,560, மார்ச் 4 - ரூ.2,120, மார்ச் 5 - ரூ.640 என விலை குறைந்தது. இந்நிலையில், தொடர்ந்து 5-வது நாளாக சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,960-க்கும், பவுனுக்கு ரூ.1,280 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,19,680-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.290-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.