சென்னை: தங்கம் விலை இன்று (செப்.9) பவுனுக்கு ரூ.1000 குறைந்தது. ஆனால் வெள்ளி விலையில் ஒரு வாரமாக எவ்வித மாற்றமும் இல்லை.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்க விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதோடு கடந்த 1-ம் தேதி நாட்டு மக்களிடம் தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது.
இன்றைய விலை விவரம்: இந்தச் சூழலில் சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,145-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.1,000 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,13,160-க்கு விற்பனையாகிறது.
24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,431-க்கும், ஒரு பவுன் ரூ.123,448-க்கும் விற்பனையாகிறது.
18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.11,915 -க்கும் ஒரு பவுன் ரூ.95,320-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை மாறாதது ஏன்?
ஒரு வாரமாக மாறாத வெள்ளி விலை:
வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3-ம் தேதியில் இருந்தே வெள்ளி விலை தொடர்ந்து கிராம் ரூ.255-க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைந்துள்ளதாலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு குறித்த அறிவிப்பை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் காத்திருப்பதாலும், வெள்ளி விலை கடந்த ஒரு வாரமாக எவ்வித மாற்றமும் இன்றி நிலையாக உள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.