கோப்புப் படம்
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.21) ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,15,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.350 என உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,250-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,14,000-க்கு விற்பனையானது.
பின்னர், இன்று பிற்பகலில் கிராமுக்கு ரூ. 515 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,415-க்கும், பவுனுக்கு ரூ.1,320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,15,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்துள்ளது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.345-க்கும், கிலோ கட்டி வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.3.45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
விலை உயர்வுக்கு காரணம்:
“உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை, கிரீன்லாந்து பிரச்சினை, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தங்கத்தில் மீது அதிக முதலீடு செய்வது போன்ற காரணங்களால், தங்கத்தின் தேவை உயர்ந்து, விலை உயர்ந்துள்ளது” என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 90.60 என்ற அளவில் வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.