புதுடெல்லி: அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.7% ஆக இருக்கும் என்று எஸ் அண்ட் பி குளோபல் தெரிவித்துள்ளது.
எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த 2 ஆண்டுகளுக்கு சிறப்பாக இருக்கும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8% ஆக இருந்தது. இது முந்தைய 5 காலாண்டுகளில் இல்லாத அளவாகும். இரண்டாவது காலாண்டு ஜிடிபி விவரம் விரைவில் வெளியாக உள்ளது.
இதனிடையே, இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளது. ஆனாலும், இந்தியாவில் தனிநபர் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது. அத்துடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இதுபோன்ற பல காரணங்களால் இந்தியாவில் நுகர்வு அதிகரிக்கும். இதனால், நடப்பு 2025- 26 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5% வளரும்.
அதேநேரம் அடுத்த 2026- 27 நிதியாண்டில் இந்திய ஜிடிபி 6.7% வளரும் என எதிர்பார்க்கிறோம். அமெரிக்கா, இந்தியா இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் மேலும் நம்பிக்கை அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.8 சதவீதமாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.