புதுடெல்லி: நாட்டின் ஜிடிபி ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் 8.2 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. இது, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.
ஜிஎஸ்டி குறைப்பால் நுகர்வு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் நிறுவனங்கள் அதிக பொருட்களை உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளன.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாகவும், 2-வது காலாண்டில் 5.6 சதவீதமாகவும் இருந்தன. அவற்றுடன் ஒப்பிடும்போது 2-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளது. அதிலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள தயாரிப்பு துறையின் வளர்ச்சி நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் 2.2 சதவீதத்திலிருந்து 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் நாமினல் ஜிடிபி செப்டம்பர் காலாண்டில் 8.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.