வணிகம்

நாடு முழுவதும் காஸ் தட்டுப்பாட்டால் விறகு அடுப்புக்கு மாறும் ஓட்டல்கள்!

உணவுப் பொருள் வகைகள் குறைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்கா - இஸ்​ரேல் - ஈரான் போர் 10 நாட்​களுக்கு மேலாக நீடிக்​கிறது. இதனால், மத்​திய கிழக்கு நாடு​களில் கச்சா எண்​ணெய் மற்​றும் எரி​வாயு உற்​பத்தி மற்​றும் விநி​யோகம் பாதிக்கப்​பட்​டுள்ளது.

மேலும் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்​லும் எண்​ணெய் கப்பல்கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படும் என ஈரான் எச்​சரிக்கை விடுத்​தது. இதனால் திரவ பெட்​ரோலி​யம் எரி​வாயு (எல்​பிஜி) விநியோகம் பாதிக்​கப்​பட்டு இந்​தி​யா​வில் வர்த்தக சிலிண்​டர்​கள் விநி​யோகம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வில் லட்​சக்​கணக்​கான ஓட்​டல்​கள் உட்பட 33 கோடி வீடுகளில் எல்​பிஜி எரி​வாயு பயன்​படுத்​தப்​படு​கிறது. இங்கு ஆண்டுக்கு 31.3 மில்​லியன் டன் எரி​வாயு உபயோகப்படுத்தப்படுகிறது.

          

ஈரான் போர் காரண​மாக எரி​வாயு விநி​யோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்​னை, பெங்​களூரு, கொல்​கத்தா போன்ற பெரு நகரங்​களில் உள்ள ஓட்​டல்​கள் பழைய விறகு அடுப்பு முறைக்கு மாறிவரு​கின்​றன. அதே​போல் ஓட்​டலில் விற்கப்படும் உணவு வகை​களின் எண்​ணிக்​கை​யும் குறைக்கப்பட்டுள்​ளது.

குறிப்​பாக அதிக எரிபொருள் தேவைப்​படும் ஃபாஸ்ட் புட் உணவுகள் விற்​பனை நிறுத்​தப்​பட்​டுள்​ளது. பெங்​களூரில் உள்ள ஓட்​டல் ஒன்றில் வழக்​க​மாக இட்​லி, தோசை, வடை, பொங்​கல், கிச்சடி, பூரி போன்ற உணவு வகைகள் விற்​பனை செய்​யப்​பட்டு வந்​தன. தற்போது அங்கு டீ மற்​றும் காபி மட்​டுமே விற்​பனை செய்யப்படுகிறது. மும்பை மற்​றும் கொல்​கத்​தா​வில் 20 சதவீத ஓட்டல்​கள் தற்​காலிக​மாக மூடப்​பட்​டுள்​ளன.

வர்த்தக சிலிண்டர்கள் கிடைக்​காத​தால், கள்​ளச் சந்​தை​யில் காஸ் சிலிண்டர்​கள் மிக அதிக விலைக்கு விற்​கப்​படு​கின்​றன. இதன் காரண​மாக மீண்​டும் பழங்​கால விறகு அடுப்பு முறைக்கு மாறு​வ​தாக ஓட்​டல் உரிமை​யாளர்​கள் பலர் தெரி​வித்​துள்​ளனர்.

ஓட்​டல்​களில் உணவு விநி​யோகம் அத்​தி​யா​வசிய சேவை என்பதால், காஸ் விநி​யோகத்தை மத்​திய அரசு சீர்​படுத்த வேண்டும் என ஓட்​டல் உரிமை​யாளர் சங்​கத்​தினர் கோரிக்கை விடுத்​துள்​ளனர். கள்​ளச் சந்​தை​யில் காஸ் சிலிண்​டர் விற்பனையை தடுக்க, காஸ் சிலிண்​டருக்​கான காத்​திருப்பு காலம் 21 நாட்​களில்​ இருந்​து 25 நாட்​களாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT