வணிகம்

60 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது: பெட்​ரோலி​ய அமைச்சகம் விளக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​நாட்​டில் 60 நாட்​களுக்​குத் தேவை​யான எரிபொருள் கையிருப்பு உள்​ளது. வதந்​தி​களை மக்​கள் நம்ப வேண்​டாம் என்றும் மத்​திய அரசு கேட்​டுக்கொண்​டுள்​ளது.

இது தொடர்​பாக மத்​திய பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: வட மாநிலங்​களில் பெட்​ரோல், டீசல் தட்டுப்பாடு என்று நேற்று முன்​தினம் வதந்தி பரவியது. இந்​தத் தகவலில் உண்​மை​யில்​லை. எனவே, பொது​மக்​கள் வதந்​தி​களை நம்ப வேண்​டாம். நாட்​டில் எங்​கும் பெட்​ரோல், டீசல் அல்​லது எல்பிஜிக்கு பற்​றாக்​குறை இல்​லை. அனைத்து சில்​லறை விற்பனை நிலையங்களும் போது​மான விநி​யோகத்​துடன் சாதாரண​மாக இயங்கி வரு​கின்​றன.

          

மக்​கள் அதி​காரப்​பூர்​வ​மான தகவல்​களை மட்​டுமே நம்​பு​மாறும், வதந்​தி​களைப் பரப்​புவதைத் தவிர்க்​கு​மாறும் அறிவுறுத்தப்படுகிறார்​கள். ஒவ்​வொரு குடிமக​னுக்​கும் தடையற்ற எரிசக்தி கிடைப்​பதை உறுதி செய்​வ​தில் அரசு உறு​தி​யாக உள்ளது. அனைத்து பெட்​ரோல் பங்க் மற்​றும் எரி​வாயு நிலையங்களி​லும் போதிய அளவு இருப்பு உள்​ளது.

ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சிக்​கல் இருந்​தா​லும், உலகின் 41-க்​கும் மேற்​பட்ட நாடு​களி​லிருந்து இந்​தியா கச்சா எண்​ணெயைப் பெற்று வரு​கிறது. நாட்​டில் உள்ள அனைத்து இந்​திய சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களும் 100 % திறனுடன் இயங்கி வரு​கின்​றன. அடுத்த 60 நாட்​களுக்​குத் தேவை​யான கச்சா எண்​ணெய் விநி​யோகம் ஏற்கெனவே உறுதி செய்​யப்​பட்​டு​விட்​டது. இந்​தி​யா​வில் 6 நாட்​கள் மட்​டுமே இருப்பு இருப்​ப​தாகப் பரவும் செய்​தி​கள் தவறானவை.

சமூக வலை​தளங்​களில் பழைய வீடியோக்​களை​யும், வெளிநாடுகளில் நில​வும் வரிசைகளை​யும் காட்டி இந்​தி​யா​வில் தட்​டுப்​பாடு நில​வுவ​தாக வதந்தி பரப்​புபவர்​கள் மீது கடுமை​யான சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும். அத்​தி​யா​வசி​யப் பொருட்​கள் குறித்து பீதியை ஏற்​படுத்​து​வது குற்​ற​மாகும். பொது​மக்​கள் அரசின் அதி​காரப்​பூர்வ அறி​விப்​பு​களை மட்​டுமே நம்​பு​மாறு கேட்டுக் கொள்​ளப்​படு​கின்​றனர். இவ்​வாறு அதில்​ கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT