கோப்புப்படம்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன.15 முதல் 18-ம் தேதி வரை வண்ணமீன் வர்த்தக திருவிழா நடைபெறவுள்ளது.
இது குறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கொளத்தூர் பகுதியில் உற்பத்தி செய்யும் வண்ணமீன்களை எளிதாக சந்தைப்படுத்திடவும், வண்ணமீன் வர்த்தகத்தை அதிகரித்திடவும், சர்வதேச தரத்திலான வண்ணமீன் வர்த்தக மையம் ரூ.53.50 கோடி செலவில், வில்லிவாக்கம், சிவசக்திநகர் பகுதியில் 3.94 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்ணமீன் வர்த்தக திருவிழா வரும் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 4 நாட்களுக்கு கொளத்தூர் வண்ணமீன் வர்த்தக மையத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெற உள்ளது.
இத்திருவிழாவில், வண்ணமீன் காட்சியகம், பேச்சு போட்டி, ஓவிய போட்டி, கோலப்போட்டி, விநாடி வினா போட்டி மற்றும் இதர பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இத்திருவிழாவில், பொதுமக்கள் கலந்துகொள்வதற்கு இலவச அனுமதி உண்டு.
எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வண்ணமீன் வர்த்தக திருவிழா-வில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.