ஊட்டி அருகே சோலூர் பகுதியில் பூண்டு விதைப்புப் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக் காய்கறிகளான கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைக்கோஸ் உட்பட பல்வேறு காய்கறிகள் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகின்றன.
இதில் வெள்ளைப் பூண்டு மட்டும் சுமார் 2,500 ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் விளையும் பூண்டு அதிக காரத் தன்மையுடன், மருத்துவ குணமும், நல்ல மணமும் கொண்டு இருப்பதால், நாடு முழுவதும் ஊட்டி பூண்டுக்கு வரவேற்புள்ளது.
கொடைக்கானல் பூண்டுக்கு அடுத்தபடியாக ஊட்டி பூண்டு வெளிநாடுகளுக்கு அதிகப்படியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் வெள்ளைப் பூண்டினை விதைக்காக குஜராத், இமாச்சல பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து வாங்கி செல்வார்கள். இதனால் ஊட்டி பூண்டு கிலோவுக்கு ரூ.200-க்கும் மேல் விற்கப்படுகிறது.
விலை சரிவால் கவலை: கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது விவசாயப் பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். நிலங்களில் உரமிட்டு பண்படுத்தி வருகின்றனர்.
ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான கொல்லிமலை, கேத்தி பாலாடா, சோலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல், பூண்டு விதைப்புப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, ‘‘மழை நீரில் பூண்டு விதை முளைத்து வளர்ந்து விடும். கடந்த ஆண்டைக் காட்டிலும், நடப்பாண்டில் பூண்டு விலை குறைந்துள்ளது.
தற்போது விதைத்துள்ள பூண்டு அறுவடைக்கு வருவதற்கு சில மாதங்கள் ஆகும். அதற்குள் உரிய விலை கிடைக்க வேண்டும்’’ என்றனர்.